search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது.
    நியூயார்க் :

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த சீசனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் ஆகியோரில் ஒருவருக்கு பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. கணிப்புகள் எல்லாம் சரியாக அமைந்தால் பெடரரும், நடாலும் அரைஇறுதியில் சந்திக்க வேண்டி இருக்கும்.

    முன்னாள் சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இடுப்பு பகுதி காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் தன்னால் விளையாட இயலாது என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே நடப்பு சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷிகோரி (ஜப்பான்), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகிய முன்னணி வீரர்களும் காயத்தால் பின்வாங்கி விட்டனர்.

    இதன் காரணமாக இளம் நட்சத்திரங்கள் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) டொமினிக் திம் (ஆஸ்திரியா), நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) மற்றும் மரின் சிலிச் (குரோஷியா), சோங்கா (பிரான்ஸ்), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) உள்ளிட்டோர் தாக்கத்தை ஏற்படுத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது.



    பெண்கள் பிரிவில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சிமோனா ஹாலெப் (ருமேனியா), விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகிய 8 பேர் இடையே போட்டி நிலவுவது சுவாரஸ்யமான அம்சமாகும்.

    ஊக்கமருந்து சர்ச்சையால் 15 மாதங்கள் தடையை அனுபவித்த பிறகு, முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அடியெடுத்து வைக்கும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மரிய ஷரபோவா (ரஷியா) முதல் சுற்றில், 2-ம் நிலை நட்சத்திரம் சிமோனா ஹாலெப்புடன் மோத இருக்கிறார்.

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.345 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.23½ கோடி பரிசுத்தொகையும், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்போர் ரூ.11½ கோடியை பரிசாக பெறுவர்.
    Next Story
    ×