search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - உத்தரபிரதேச அணிகள் ஆட்டம் சமனில் முடிந்தது
    X

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - உத்தரபிரதேச அணிகள் ஆட்டம் சமனில் முடிந்தது

    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த தமிழ் தலைவாஸ்-உத்தரபிரதேச யோத்தா அணிகள் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
    லக்னோ:

    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த தமிழ் தலைவாஸ்-உத்தரபிரதேச யோத்தா அணிகள் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

    5-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறையும் மோத வேண்டும்.

    இந்த நிலையில் லக்னோவில் நேற்றிரவு நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தபாங் டெல்லி (ஏ பிரிவு) அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் அரியானா அணியின் கையே ஓங்கி இருந்தது. இரண்டு அணிகளும் ரெய்டில் சொதப்பினாலும், அரியானா அணியின் தடுப்பு ஆட்டம் அருமையாக இருந்தது. முதல் 10-வது நிமிடத்திலேயே தபாங் டெல்லி அணியை ‘ஆல்-அவுட்’ செய்து அரியான அணி தனது பலத்தை காட்டியது. முதல் பாதியில் அரியானா அணி 17-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

    2-வது பாதி ஆட்டத்தில் டெல்லி அணி சரிவில் இருந்து கம்பீரமாக மீண்டு சமநிலையை எட்டியதுடன் அரியானா அணியை ஆல்-அவுட் செய்து பதிலடி கொடுத்தது. கடைசி 2 நிமிடத்தில் இரு அணிகளும் மாறி, மாறி மயிரிழையில் முன்னிலை வகித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் அரியானா அணி 27-25 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது. 6-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் தோல்வியும், 2 ஆட்டத்தில் டையும் செய்து இருந்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். 2 ஆட்டத்தில் வெற்றி கண்டு இருந்தது.

    அதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் உத்தரபிரதேச யோத்தா-தமிழ் தலைவாஸ் (பி பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உத்தரபிரதேச அணி முதல் பாதி ஆட்டத்தின் 19-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

    பின்பாதியில் தமிழ் தலைவாஸ் அணி சரியான பதிலடி கொடுத்தது. கடைசி 5 நிமிடங்களில் யார் வெற்றி பெறுவார் என்பது மதில் மேல் பூனையாக இருந்தது. திரில்லான இந்த ஆட்டம் 33-33 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. 6-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி டை செய்த 2-வது ஆட்டம் இதுவாகும். ஒரு வெற்றியும், 3 தோல்வியும் கண்டு இருந்தது. 10-வது ஆட்டத்தில் ஆடிய உத்தரபிரதேச அணி டை கண்ட 2-வது போட்டி இதுவாகும். 3 வெற்றியும், 5 தோல்வியும் கண்டுள்ளது.

    இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச யோத்தா- தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. 
    Next Story
    ×