search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பிடிப்பது கடினம்: காம்பீர் சொல்கிறார்
    X

    மீண்டும் இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பிடிப்பது கடினம்: காம்பீர் சொல்கிறார்

    யுவராஜ் சிங் அணியில் இடம்பெறாததை ஓய்வு என்று கூறுவது சரியாக வார்த்தை கிடையாது. அவர் அணியில் மீண்டும் இடம்பிடிப்பது கடினம் என காம்பீர் கூறியுள்ளார்.
    இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், விமர்சனத்திற்குள்ளான பிட்னெஸ் டெஸ்டில் (யோ-யோ டெஸ்ட்) யுவராஜ் சிங் தோல்வியடைந்ததே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் யுவராஜ் சிங் நீக்கத்திற்கு ஓய்வு என்பது சரியான வார்த்தை கிடையாது. மீண்டும் அணியில் இடம்பிடிப்பது மிகக்கடினம் என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து கவுதம் காம்பீர் கூறுகையில் ‘‘யுவராஜ் சிங் அணியில் இடம்பெறாததை ஓய்வு என்பது சரியான வார்த்தை என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் யுவராஜ் சிங் அதிகமான போட்டிகளில் விளையாடாத நிலையில், அவர் கட்டாயம் விளையாட விரும்பியிருக்கவேண்டும்.



    நாம் உலகக்கோப்பையில் அவரை பார்க்க வேண்டுமென்றால், அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். யுவராஜ் சிங் போன்ற வீரர்களை, தொடர்ந்து பார்ஃமில் இருப்பதை நீங்கள் விரும்ப வேண்டும். ஒரு தொடரில் வாய்ப்பு கொடுத்து ஒரு தொடரில் ஓய்வு கொடுக்கக் கூடாது.

    கடுமையான உடற்தகுதி முறையை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ளது. இதனால் யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகக்கடினம் என நினைக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த வீரர் என்பதால், அவர் செய்வார் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×