search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியை வீழ்த்தி சாம்பியன்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.1 கோடி பரிசு
    X

    தூத்துக்குடியை வீழ்த்தி சாம்பியன்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.1 கோடி பரிசு

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்‘ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தூத்துக்குடி பேட்ரியாட்சை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. வென்ற அணிக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்னே எடுக்க முடிந்தது. அபினவ் முகுந்த் அதிக பட்சமாக 38 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி), கவுசிக் காந்தி 19 பந்தில் 24 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். சாய்கிஷோர், அருண்குமார் தலா 2 விக்கெட்டும், ஆர்.சதீஷ், அலெக்சாண்டர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

    கோபிநாத் 38 பந்தில் 50 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஆர்.சதீஷ் 16 பந்தில் 23 ரன்னும் (2 சிக்சர்), வசந்த் சரவணன் 10 பந்தில் 23 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அதிசயராஜ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், அவுசிக் சீனிவாஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.


    அதிசயராஜ் வீசிய ஆட்டத்தின் 16-வது ஓவரில் கேப்டன் சதீஷ் 2 சிக்சர் அடித்தது ஆட்டத்தின் முக்கிய திருப்பமாகும்.

    19-வது ஓவரில் 4-வது மற்றும் 5-வது பந்தில் சிக்சரும், கடைசி பந்தில் பவுண்டரியும் அடித்து வசந்த் சரவணன் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். இதனால் கடைசி ஓவர் வரை ஆட்டம் செல்லாமல் 19-வது ஓவரிலேயே முடிந்தது.

    சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு ரூ.60 லட்சம் கிடைத்தது.

    டி.என்.பி.எல். சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தூத்துக்குடி அணியிடம் 4 முறை தோற்று இருந்தது. கடந்த முறை லீக் மற்றும் இறுதிப் போட்டியிலும், இந்த முறை லீக் மற்றும் முதல் தகுதி சுற்றிலும் தோற்று இருந்தது.

    அதற்கு நேற்றைய இறுதிப்போட்டியில் அந்த அணியை சரியான முறையில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பழி தீர்த்துக் கொண்டது.

    தூத்துக்குடி அணி கடந்த ஆண்டு 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று டி.என்.பி.எல். கோப்பையை வென்றது. இந்த ஆண்டு தொடர்ந்து 8 ஆட்டங்களில் வென்றது. 13 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்ற அந்த அணியின் வெற்றிப் பயணத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முற்றுப்புள்ளி வைத்தது.

    Next Story
    ×