search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X

    டி.என்.பி.எல்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் லீக் சுற்று, குவாலிபையர்-1, எலிமினேட்டர், குவாலிபையர்-2 சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    சென்னை சேப்பாக் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் கவுசிக் கார்த்திக் களமிறங்கினர்.

    முந்தைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய வாசிங்டன் சுந்தர் இம்முறை, சதிஸ் பந்துவீச்சில் 14 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய அபினவ் முகுந்த், கவுசிக் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சேப்பாக் அணி வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் தூத்துக்குடி அணியின் ஸ்கோர் மந்தமாகவே உயர்ந்தது. இறுதிகட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்ததால் 20 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. 

    சேப்பாக் அணியில் சாய் கிஷோர் மற்றும் அருண் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.

    சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோபிநாத் மற்றும் தலைவன் சற்குணம் களமிறங்கினர். சற்குணம் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின், கார்த்திக் களமிறங்கினார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய கோபிநாத், கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆடி ரன் குவிப்பில் இறங்கினார். 

    கார்த்திக் 16 ரன்களில் கேட்சாகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்டனி தாஸ் 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து சேப்பாக் அணியின் கேப்டன் சதிஷ் களமிறங்கினார். ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய கோபிநாத் 38 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அதிசயராஜ் பந்துவீச்சில் ஸ்ரீனிவாஸிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அதன்பின் கேப்டன் சதிஷுடன் சத்யமூர்த்தி ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். சேப்பாக் அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சதிஷ், சத்யமூர்த்தி இருவரும் தலா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தூத்துக்குடி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

    இதன்மூலம், சேப்பாக் அணி இந்தாண்டின் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை முதன் முறையாக தட்டிச்சென்றது. கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு நடைபெற்ற டி.என்.பி.எல் தொடரில் தூத்துக்குடி அணிக்கு எதிராக நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்த சேப்பாக் அணியானது இந்த வெற்றி மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.


    Next Story
    ×