search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல். சாம்பியன் யார்? இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்
    X

    டி.என்.பி.எல். சாம்பியன் யார்? இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் சென்னையில் இன்று மோதுகின்றன.


    சென்னை:

    மூன்று வாரத்திற்கு மேலாக ரசிகர்களுக்கு விருந்து படைத்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அரங்கேறும் சாம்பியன் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், தூத்துக்குடி பேட்ரியாட்சும் பலப்பரிட்சை செய்கின்றன.

    சேப்பாக் - தூத்துக்குடி அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சிடம் தோல்வி அடைந்தது. 

    லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி அணி முதல் தகுதிச்சுற்றில் சேப்பாக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இரண்டாவது தகுதிச்சுற்றில் கோவை கிங்சை பதம் பார்த்து கம்பீரமாக இறுதிசுற்றுக்குள் நுழைந்துள்ளது.

    இத்தொடர் தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்திவரும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் போன்ற அனுபவ வீரர்கள் தூத்துக்குடி அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் அஸ்வின் கிறிஸ்ட், வாஷிங்டன் சுந்தர், அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.

    இவ்விறு அணிகளும் இதுவரை மோதியுள்ள 4 போட்டிகளிலும் சேப்பாக் தோல்வியடைந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் சேப்பாக் அணி தூத்துக்குடி அணியிடம் தோல்வியடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் சேப்பாக் அணி உள்ளது.

    ஆக, இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோத இருப்பதால், இதில் இறுதி சுற்றுக்கே உரிய சுவாரஸ்யத்துக்கும், பரபரப்புக்கும் குறைவிருக்காது என்று நம்பலாம்.

    சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.4 கோடி பரிசுத்தொகை காத்திருக்கிறது. 

    இப்போட்டி மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    Next Story
    ×