search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை: இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது
    X

    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை: இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது

    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, ராங்கிரி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30-க்கு தொடங்குகிறது.

    தம்புல்லா : 

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் முதல் முறையாக ‘ஒயிட்வாஷ்’ சாதனை படைத்தது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. கடைசியாக ஒரு டி20 போட்டியும் நடைபெற உள்ளது. 

    முதல் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் இன்று நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் அபாரமாக வென்றதால், அதே உற்சாகத்துடன் இந்தியா களமிறங்குகிறது. 2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பைக்கு அணியை தயார்படுத்த இந்திய அணி நிர்வாகம் உறுதியுடன் உள்ளதால், இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளதால், இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவை கட்டுப்படுத்துவது அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஜடேஜா, அஷ்வினுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தாலும், அக்சர் பட்டேல் - குல்தீப் யாதவ் சுழல் கூட்டணியும், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகுர், பூம்ரா வேகமும் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், டெஸ்ட் தொடரில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் இலங்கை அணி களமிறங்குகிறது. 

    தரங்கா தலைமையிலான இலங்கை அணியில் குசால், மேத்யூஸ், டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் இந்தியாவுக்கு ஈடு கொடுக்கலாம். மலிங்கா, மேத்யூஸ், சந்தகன், புஷ்பகுமாரா பந்துவீச்சையும் அலட்சியப்படுத்த முடியாது. ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி எப்போதுமே சிறப்பாக விளையாடும் என்பதுடன், சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்குவது கூடுதல் சாதகமாக அமையும். இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    2019 உலக கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற இலங்கை அணி இந்த தொடரில் 2 வெற்றியை வசப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுவும் இப்போட்டிக்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா - இலங்கை கடைசியாக விளையாடிய 18 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 14 போட்டிகளில் வென்றுள்ளது.

    இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, அஜிங்யா ரகானே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர்.

    இலங்கை: உபுல் தரங்கா (கேப்டன்), அஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ், சமரா கபுகேதரா, மிலிண்டா சிரிவர்தனா, மலிண்டா புஷ்பகுமாரா, அகிலா தனஞ்ஜெயா, லக்‌ஷன் சந்தகன், திசாரா பெரேரா, வனிண்டு ஹசரங்கா, லசித் மலிங்கா, துஷ்மந்த சமீரா, விஷ்வா பெர்னாண்டோ.
    Next Story
    ×