search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரப்பு கால்பந்து தொடர்: முதல் போட்டியில் மொரீசியஸை வீழ்த்தியது இந்தியா
    X

    முத்தரப்பு கால்பந்து தொடர்: முதல் போட்டியில் மொரீசியஸை வீழ்த்தியது இந்தியா

    இந்தியா, மொரிசியஸ், செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு கால்பந்து தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொரிசியஸ் அணியை வென்றது.


    மும்பை:

    இந்தியா, மொரிசியஸ், செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய மூன்று நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு கால்பந்து தொடர் மும்பை நகரில் நேற்று (19-ம் தேதி) தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா - மொரீசியஸ் அணிகள் மோதின. 

    இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி, கோல்கீப்பர் குர்பிரித் சிங் சந்து மற்றும் உதந்தா சிங் ஆகியோர், நாளை தொடங்க உள்ள ஆசிய கால்பந்து கான்பெடரேஷன் கோப்பையில் பெங்களூர் எஃப்.சி. அணிக்காக விளையாட உள்ளதால் இப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை. 

    போட்டி தொடங்கிய 15-வது நிமிடத்தில் மொரிசியஸின் ஜீன் மெர்வின் ஜோசிலின் முதல் கோல் அடித்தார். இதன்மூலம் மொரிசியஸ் அணி முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து 37-வது நிமிடத்தில் இந்தியாவின் ராபின் சிங் கோல் அடித்தார். இதன்மூலம் 1-1 என போட்டி சமனானது.

    அதன்பின், 62-வது நிமிடத்தில் இந்தியாவின் பல்வந்த் சிங் கோல் அடித்தார். இதன்மூலம் 2-1 என இந்திய அணி முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து, இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதன்மூலம், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொரிசியஸ் அணியை வீழ்த்தியது.

    இந்திய அணி அடுத்த போட்டியில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணியை 24-ம் தேதி எதிர்கொள்கிறது. 22-ம் தேதி நடைபெறும் போட்டியில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - மொரிசியஸ் அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×