search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணக்கு தெரியவில்லை என பிஞ்சுகளை அடிக்காதீர்கள்: பெற்றோருக்கு தவான், உத்தப்பா வலியுறுத்தல்
    X

    கணக்கு தெரியவில்லை என பிஞ்சுகளை அடிக்காதீர்கள்: பெற்றோருக்கு தவான், உத்தப்பா வலியுறுத்தல்

    பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பார்த்தபின், பிஞ்சுகளை அடிக்காதீர்கள் என்று தவான், உத்தப்பா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    பொதுமக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரியப்படுத்துவதற்காக வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். கருத்துகளை பரிமாறிக் கொள்வதுடன் வீடியோக்களையும் பரிமாறிக் கொள்கிறார்கள்.

    சில பெற்றோர்கள் தங்களது சின்னஞ்சிறு குழந்தைகளை மிரட்டி படிக்க வைக்கும் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். ஜாலிக்காகவோ அல்லது எங்களது குழந்தைகளை சிறுவயதில் இருந்து கண்டிப்புடன் வளர்க்கிறோம் என்பதை காண்பிப்பதற்காகவோ இப்படி செய்கிறார்கள். சிலர் இப்படி சித்தரித்தும் வெளியிடுகிறார்கள்.



    ஆனால், உலகத்தைப் பற்றி ஏதும் அறியாத குழந்தைகளை இப்படி வாட்டி வதைப்பது பெரும்பாலானவர்களின் மனதை காயப்படுத்துகிறது. இப்படிப்பட்ட ஒரு வீடியோவை பார்த்த கிரிக்கெட் வீரர்கள் தவான் மற்றும் உத்தப்பா ஆகியோர் மனமுடைந்துள்ளனர்.

    அந்த வீடியோவில் குழந்தையை ஒன்று முதல் 10 வரை படிக்கச் சொல்லி ஒரு பெண்மணி சொல்கிறார். அந்த குழந்தை மூன்று வரை சொல்லிய பிறகு திணறுகிறது. ஆனால், பெண்மணி தொடர்ந்து வற்புறுத்துகிறார்.



    இதனால் அந்த குழந்தை தனக்கு தலை வலிக்கிறது, போதும் என்று கெஞ்சுகிறது. ஆனால், அந்த பெண்மணி விட்டபாடில்லை. ஒரு கட்டத்தில் அந்த குழந்தையின் கன்னத்தில் பளார் என அறைவிடுகிறார்.

    இதுகுறித்த வீடியோக்களை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, குழந்தைகளை பொறுமையாக கையாளுங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எந்த நேரமும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் பொறுமையாக பழகுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.



    ஒவ்வொரு குழந்தைகளும் தங்களது திறமைக்கு ஏற்றபடி கற்றுக் கொள்வார்கள். குழந்தைகளை அடிப்பதையும், அவர்களை இழிவுபடுத்துவதையும் தவிருங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

    உத்தப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இதுபோன்ற சம்பவம் இதயத்தை நொறுக்கும் விதமாக உள்ளது. இந்த வகையில் குழந்தைகளை வழிநடத்தக் கூடாது. இதை தடுப்பது அவசியம். குழந்தைகள் பயத்தோடு வளர்வதற்குப் பதிலாக அன்போடு வளர்க்க முடியும் என்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×