search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாட இலங்கை விருப்பம்
    X

    பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாட இலங்கை விருப்பம்

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

    கொழும்பு:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற மகிளா ஜெயவர்தனே தலைமையிலான இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லாகூர் முகமது கடாஃபி மைதானத்துக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய 12 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து பாதுகாப்புக் காரணங்களைக் கூறி சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தவிர்த்து வருகின்றன. 

    2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணி மட்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. மற்ற நாடுகள் பாகிஸ்தான் அணியுடனான சர்வதேச போட்டிகளை அரபு நாடுகளில் விளையாடி வருகின்றன.

    இந்த நிலையில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    கொழும்புவில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசிய இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபால, "பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இலங்கை அணி தயாராக இருக்கிறது. வாய்ப்புகள் கைகூடிவரும் எனில், லாகூரில் ஒரு டி20 போட்டியில் விளையாட இலங்கை அணி தயார்" என்று கூறினார். ஆனால், போட்டி நடைபெறும் தேதி இதுவரை முடிவாகவில்லை. இந்தப் போட்டி செப்டம்பர் மாதத்தில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    பாகிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரிகள் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் இந்த கிரிக்கெட் போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    Next Story
    ×