search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்ராத்தின் அறிவுரை உதவிகரமாக இருந்தது: தூத்துக்குடி வீரர் அதிசயராஜ்
    X

    மெக்ராத்தின் அறிவுரை உதவிகரமாக இருந்தது: தூத்துக்குடி வீரர் அதிசயராஜ்

    மெக்ராத்தின் அறிவுரை தனக்கு உதவிகரமாக இருந்தது என்று தூத்துக்குடி வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் தெரிவித்துள்ளார்.
    சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிரான ஆட்டத்தில் 4 முன்னணி விக்கெட்டுகளை சாய்த்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டவர், தூத்துக்குடி வேகப்பந்து வீச்சாளர் 25 வயதான அதிசயராஜ் டேவிட்சன். ‘இலங்கை புயல்’ மலிங்காவின் ஸ்டைலில் தனது கையை பக்கவாட்டில் வளைத்து வீசி மிரட்டக்கூடியவர்.

    அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி: கடந்த ஆண்டும் சேப்பாக் அணிக்கு எதிராக வெற்றி பெற்றீர்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்: சேப்பாக் அணியுடன் மோதியுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கேள்வி: இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட திட்டம் எதுவும் வைத்திருந்தீர்களா?

    பதில்: டாஸில் ஜெயித்தால் முதலில் பேட் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஏனெனில் இந்த தொடர் முழுவதும் நாங்கள் முதலில் தான் பேட் செய்திருக்கிறோம். ஆனால் இந்த ஆட்டத்தில் அது மாறி விட்டது. அதனால் சேப்பாக் சூப்பர் கில்லீசை 120 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். அவ்வாறே செய்ததால் இலக்கை எளிதில் அடைய முடிந்தது.

    கேள்வி: உங்களது பந்து வீச்சு முறையில் எத்தகைய முன்னேற்றம் அடைந்துள்ளர்கள்?

    பதில்: இது தான் என்னுடைய இயல்பான பந்து வீச்சு. மற்றவர்களை பார்த்து அது போல் பந்து வீச வேண்டும் என்ற விருப்பம் கிடையாது. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு மலிங்காவின் பந்து வீச்சு முறையின் சில தந்திரங்களை எனக்குள் உள்வாங்கிகொண்டேன்.

    கேள்வி: நீங்கள் எம்.ஆர்.எப். பவுண்டேசனில் பயிற்சி எடுத்தீர்களா?

    பதில்: ஆமாம். மெக்ராத் எனக்கு பயிற்சி அளித்தார். அவர் என்னிடம், இந்த மாதிரியே தொடர்ந்து பந்து வீசு. மாற்றம் செய்யாதே என்று அறிவுரை வழங்கினார். அவரது ஆலோசனை உதவிகரமாக இருந்தது.

    இவ்வாறு அதிசயராஜ் கூறினார்.
    Next Story
    ×