search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி போராட்டம்
    X

    3-வது டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி போராட்டம்

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பாலோ-ஆன் ஆன இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.
    பல்லேகலே:

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேவில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 487 ரன் குவித்தது. தவான் (119 ரன்), ஹர்த்திக் பாண்ட்யா (108 ரன்) சதம் அடித்தனர்.

    இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டு ‘பாலோஆன்’ ஆனது. கேப்டன் சன்டிமால் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 19 ரன் எடுத்து இருந்தது. கருணாரத்னே 12 ரன்னும், பிஷ்பக்குமாரா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 333 ரன் தேவை. கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.

    ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இலங்கையின் 2-வது விக்கெட் விழுந்தது. கருணாரத்னே 16 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 20 ஆக இருந்தது.

    அதனைத் தொடர்ந்து பிஷ்பக்குமாரா, குஷால் மெண்டீஸ் அடுத்தடுத்து சமி பந்தில் ஆட்டம் இழந்தனர். தற்போது வரை இலங்கை அணி 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.

    இந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்டில் 304 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.

    இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதன் மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என எதிர்பாக்கப்படுகிறது.
    Next Story
    ×