search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க பதவியை ராஜினாமா செய்தார் லலித் மோடி
    X

    ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க பதவியை ராஜினாமா செய்தார் லலித் மோடி

    ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் வகித்து வந்த பதவியை லலித் மோடி ராஜினாமா செய்துள்ளார். மேலும், கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ‘குட் பை’ என்று கூறியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரியாக இருந்தவர் லலித் மோடி. ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த இவர், 2008-ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல். தொடருக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஐ.பி.எல். தொடருக்கான சிஇஓ-வாக செயல்பட்ட லலித் மோடி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததால், விசாரணைக்குப் பயந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

    என்றாலும், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் ஒரு பிரதிநிதியாகவே இருந்தார். இதனால் பிசிசிஐ-யால் ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கம் தடைபெற்றது.



    பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகாவுர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு தன்னுடைய மகனை நிறுத்தினார். ஆனால், லலித் மோடியின் மகன் தோல்வியை சந்தித்தார்.

    இந்நிலையில் நாகாவுர் மாவட்ட சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும், பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரிக்கும் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் லலித் மோடி. அந்த கடிதத்தில் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ‘குட் பை’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×