search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டு மண்ணில் ஒயிட்வாஷ்: இலங்கையை வீழ்த்தி சாதனைப் படைக்குமா இந்தியா?
    X

    வெளிநாட்டு மண்ணில் ஒயிட்வாஷ்: இலங்கையை வீழ்த்தி சாதனைப் படைக்குமா இந்தியா?

    இலங்கை அணியை வீழ்த்தி வெளிநாட்டு மண்ணில் முதன்முறையாக ஒயிட் வாஷ் செய்த அணி என்ற பெருமையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பெற இருக்கிறது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டு வெற்றிகள் மூலம் இந்தியா தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பல்லேகலேயில் நாளை தொடங்குகிறது.

    டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு இலங்கையால் ஈடுகொடுக்க முடியவில்லை. காலே டெஸ்டில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது. 2-வது போட்டியில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டது. இரண்டு போட்டியிலும் விராட் கோலி டாஸ் வென்றது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

    இருந்தாலும் இலங்கை அணியால் எந்தவித தாக்குதலையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்திய அணிக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆகி விடக்கூடாது என்பதில் இலங்கை அணி கவனமாக உள்ளது. இதனால் கடைசி டெஸ்டிற்கான இலங்கை அணியில் காயத்தால் அவதிப்பட்டு வந்த பிரதீப், ஹெராத் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் காமேஜ் மற்றும் சமீரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவை வீழ்த்த முடியாததால், பல்லேகலே ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஆடுகளம் பச்சைபசேல் என்று புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இலங்கை அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது.



    அதேவேளையில் இந்தியா பல்லேகலே டெஸ்டில் வெற்றி பெற்று வெளிநாட்டு மண்ணில் எதிரணியை ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய அணி என விராட் கோலி தலைமையிலான அணி பெயரெடுக்க விரும்புகிறது.

    வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கொடுத்தாலும் இந்தியாவிற்கு கவலையில்லை. லோகேஷ் ராகுல், புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் உள்ளனர். அதேபோல் சகா, அஸ்வின் ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுப்பார்கள். பந்து வீச்சில் உமேஷ் யாதவ், மொகமது ஷமி உடன் புவனேஸ்வர் குமாரை களமிறக்க வாய்ப்புள்ளது. ஜடேஜா இல்லாததால் அஸ்வினை மட்டும் சுழற்பந்து வீச்சாளராக வைத்து இந்தியா களம் இறங்கலாம். அல்லது ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம்.

    எப்படி இருந்தாலும் பல்லேகலே டெஸ்டில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
    Next Story
    ×