search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வாளர்கள் சிறந்த அணியைத்தான் தேர்வு செய்ய வேண்டும்: வெகுமதி குறித்து மதன் லால் கருத்து
    X

    தேர்வாளர்கள் சிறந்த அணியைத்தான் தேர்வு செய்ய வேண்டும்: வெகுமதி குறித்து மதன் லால் கருத்து

    இந்திய அணியின் தேர்வாளர்கள் சிறந்த அணியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் ஆல்ரவுண்டர் மதன் லால் கூறியுள்ளார்.
    இந்திய சீனியர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறியது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக டெஸ்ட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடுமையாக போராடிய இந்திய வீராங்கனைகள் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.

    இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதில் தேர்வாளர்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று பிசிசிஐ நினைக்கிறது. சிறந்த அணியை அவர்கள் தேர்வு செய்ததால்தான் இந்தியா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்று கூறி, தேர்வாளர்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.

    தேர்வாளர்களுக்கு வெகுமதி வழங்குவது குறித்து முன்னாள் ஆல்ரவுண்டர் மதன் லால் விமர்சனம் செய்துள்ளார்.



    தேர்வாளர்களுக்கு வெகுமதி வழங்கப்பட இருப்பது குறித்து மதன் லால் கூறுகையில் ‘‘சிறந்த அணியை தேர்வு செய்வதற்காக தேர்வாளர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று செய்தியை படித்ததும் ஆச்சர்யம் அடைந்தேன். அவர்கள் சிறந்த அணியைத்தான் தேர்வு செய்ய வேண்டும். மோசமான அணியை அல்ல’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘இந்திய அணி சிறப்பாக விளையாடியதற்காக தேர்வாளர்கள் வெகுமதி பெற்றிருக்கிறார்கள். இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியபோது ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வாளர் குழுவிற்கு வெகுமதி வழங்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×