search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு?
    X

    இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு?

    இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
    கொழும்பு:

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டுகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 20-ந்தேதி தம்புல்லாவில் நடக்கிறது.

    இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நாளை மறுதினம் அறிவிக்கப்படுகிறது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தற்போது இலங்கையில் இருக்கிறார். தேர்வு குழு உறுப்பினர் தேவங் காந்தி தென்ஆப்பிரிக்காவில் இந்திய ‘ஏ’ அணியின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார். இவர்கள் மற்றொரு தேர்வு குழு உறுப்பினர் சரண்தீப் சிங்குடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிப்பார்கள்.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் இடைவிடாது நிறைய போட்டிகளில் விளையாடி வருவதால் ஒரு நாள் தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது டெஸ்டில் ஜடேஜா ஆடவில்லை. இந்த தொடரில் இதுவரை 108.3 ஓவர்கள் வீசியிருக்கும் அஸ்வின் கடைசி டெஸ்டையும் சேர்த்து எப்படியும் 150 ஓவர்களுக்கு மேல் வீசியிருப்பார். அதனால் அவருக்கு ஓய்வு அவசியம் என்று தேர்வு குழு கருதுகிறது.

    அவர்களுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல், ஆல்-ரவுண்டர் குணால் பாண்ட்யா ஆகியோரில் இருவர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ‘யார்க்கர் புயல்’ ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புகிறார்.

    இலங்கை தொடருக்கு பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக நிறைய சர்வதேச போட்டிகளில் விளையாட இருக்கிறது. ஆனாலும் கேப்டன் விராட் கோலி தனக்கு ஓய்வு தேவை இல்லை என்று கூறி விட்டார். எனவே அவர் இலங்கையுடனான ஒரு நாள் தொடரிலும் ஆடுவார். 
    Next Story
    ×