search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி ’பிளே ஆப்’ சுற்றை உறுதி செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X

    திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி ’பிளே ஆப்’ சுற்றை உறுதி செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் திருச்சி வாரியர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ’பிளே ஆப்’ சுற்றை உறுதி செய்தது.
    திண்டுக்கல்:

    8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    தொடர்ந்து 6 வெற்றிகளை குவித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. எஞ்சிய 3 இடங்களை பிடிக்க அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 



    இதனையடுத்து பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது.  தொடக்க வீரர்கள் இந்திரஜித் 34(30), பரத் சங்கர் 25(20) ரன்கள் எடுத்தனர். அக்கில் ஸ்ரீநாத் 23(14) எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சென்னை அணியில் மகேஷ் 3 விக்கெட்டுகளையும், குமரன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

    பின்னர் 133 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் தலைவன் சற்குணம், கோபிநாத் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அதிரடியாக விளையாடிய தலைவன் சற்குணம் 42(33) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கோபிநாத் 28(22), சரவணன் ரன் எதுவும் எடுக்காத நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

    இதனால் சேப்பாக் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அந்தோணி தாஸ், சசிதேவ் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்தோணி தாஸ் சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார். இறுதில் 15.4 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 22 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் விளாசிய இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அந்தோணி தாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சசி தேவ் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஏற்கனவே, திருவள்ளூர் வீரன்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட் ஆகிய 4 அணிகளை வென்றுள்ள நிலையில் தனது 5-வது வெற்றியை தற்போது பதிவு செய்துள்ளது. 

    தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியிடம் மட்டும் தோல்வி கண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தூத்துக்குடி அணிக்கு அடுத்து இரண்டாவதாக ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உறுதி செய்தது.
    Next Story
    ×