search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்யும் உத்வேகத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்
    X

    ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்யும் உத்வேகத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    திண்டுக்கல்:

    8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    தொடர்ந்து 6 வெற்றிகளை குவித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. எஞ்சிய 3 இடங்களை பிடிக்க அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருவள்ளூர் வீரன்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட் ஆகிய 4 அணிகளை வென்றது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியிடம் மட்டும் தோல்வி கண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. திருச்சி வாரியர்ஸ் அணி, தூத்துக்குடி, திருவள்ளூர், திண்டுக்கல் அணிகளிடம் தோல்வி கண்டது. மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. அதேநேரத்தில் நெருக்கடியான தருணங்களில் அடித்து ஆடுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஒன்று, இரண்டு ரன்களை ஓடி எடுப்பதிலும் அந்த அணி கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் பீல்டிங்கில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என்பதால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முழு உத்வேகத்துடன் விளையாடும். இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    கடந்த ஆண்டு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: ஆர்.சதீஷ் (கேப்டன்), தலைவன் சற்குணம், கோபிநாத், வசந்த் சரவணன், கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சசிதேவ், அந்தோணி தாஸ், யோமகேஷ், சாய் கிஷோர், ஜோயல் ஜோசப் அல்லது அருண்குமார், அலெக்சாண்டர்.

    திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்த்ராஜித் (கேப்டன்), பரத் ஷங்கர், ஆதித்யா கிரீதர், நிலேஷ் சுப்பிரமணியன், கோசிக், அகில் ஸ்ரீநாத், ஆதித்ய கணேஷ், பிரபு, கவுசிக், ஜேசுராஜ், விக்னேஷ்.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×