search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக தடகள போட்டி இன்று தொடக்கம் - கடைசியாக களம் இறங்குகிறார் உசேன் போல்ட்
    X

    உலக தடகள போட்டி இன்று தொடக்கம் - கடைசியாக களம் இறங்குகிறார் உசேன் போல்ட்

    உலக தடகள போட்டி லண்டனில் இன்று நடக்கிறது. மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் இந்த போட்டியுடன் விடைபெறுகிறார்.
    லண்டன்:

    உலக தடகள போட்டி லண்டனில் இன்று நடக்கிறது. மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் இந்த போட்டியுடன் விடைபெறுகிறார்.

    16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது. 205 நாடுகள் பங்கேற்கும் இந்த தடகள திருவிழாவில் 24 பந்தயங்கள் இடம் பெறுகின்றன.

    இதில், எல்லோரது பார்வையும் உலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட் மீதே பதிந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட், ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கங்களை அள்ளியிருக்கும் உசேன் போல்ட் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். தோற்கடிக்கப்படாமல் விடைபெறுவேன் என்று சூளுரைத்து இருக்கிறார். அவர் களம் இறங்கும் 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிசுற்று நாளை நடக்கிறது.

    நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான இங்கிலாந்தின் மோ பாரா 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனாக வலம் வருகிறார். இந்த சீசனுடன் ஓய்வு பெற திட்டமிட்டு இருக்கும் 34 வயதான மோ பாராவுக்கு இது தான் கடைசி உலக தடகள போட்டி என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    1983-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 2003-ம் ஆண்டு பாரீசில் நடந்த உலக தடகளத்தில் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இந்த முறை இந்தியா தரப்பில் 25 வீரர், வீராங்கனைகள் அடியெடுத்து வைக்கிறார்கள். தகுதி சுற்றுகளை தாண்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலே பெரிய விஷயம் என்று சொல்லும் நிலைமையில் தான் இந்திய அணியின் நிலை உள்ளது.

    19 வயதான ஈட்டி எறிதல் வீரர் அரியானாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா மட்டுமே கொஞ்சம் எதிர்பார்ப்பில் இருக்கிறார். அவர் 86.48 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். அதனால் அவர் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 
    Next Story
    ×