search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீராங்கனைகள் 10 பேருக்கு தலா ரூ.13 லட்சம் ஊக்கத்தொகை: ரெயில்வே மந்திரி அறிவிப்பு
    X

    இந்திய வீராங்கனைகள் 10 பேருக்கு தலா ரூ.13 லட்சம் ஊக்கத்தொகை: ரெயில்வே மந்திரி அறிவிப்பு

    ரெயில்வே துறையில் வேலை பார்க்கும் 10 இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு தலா ரூ.13 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ரெயில்வே துறையில் வேலை பார்க்கும் 10 இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு தலா ரூ.13 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி, இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.



    உலக கோப்பையில் வியப்புக்குரிய வகையில் விளையாடிய இந்திய பெண்கள் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. ஏற்கனவே அறிவித்தபடி அணியின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா ரூ.50 லட்சமும், அணி உதவியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் (பொறுப்பு) சி.கே.கண்ணா வழங்கி கவுரவித்தார்.

    ரெயில்வே துறை சார்பிலும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 15 வீராங்கனைகளில் 10 பேர் ரெயில்வே துறையில் பணியாற்றுபவர்கள். அவர்களுக்கு தலா ரூ.13 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.30 கோடி ஊக்கத்தொகையும், பதவி உயர்வும் வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்தார். கேப்டன் மிதாலிராஜ் மற்றும் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு ‘கெசட்டெட்’ அதிகாரி அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இதன்படி மிதாலிராஜ் ஐதராபாத்தில் உள்ள தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் தலைமை அலுவலக சூப்பிரண்டாக பதவி உயர்வு பெறுகிறார்.

    மந்திரி சுரேஷ் பிரபு பேசுகையில் ‘15 வீராங்கனைகளில் 10 பேர் ரெயில்வே துறையைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமை அளிக்கிறது. கேப்டன், துணை கேப்டன், விக்கெட் கீப்பர், அதிக ரன்கள் குவித்தவர் எல்லாருமே எங்களது ஊழியர்கள் தான். முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜீயிடம் அவரது காலத்தில் பெண்கள் கிரிக்கெட் எப்படி இருந்தது என்று கேட்டேன். அவர் 1971-ம் ஆண்டில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியதாக கூறினார். அதாவது 46 ஆண்டுகளுக்கு முன்பு விளையாடத் தொடங்கி இருக்கிறார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலக கோப்பையில் இந்த அளவுக்கு கடும் சவால் கொடுக்கக்கூடிய அணியாக உருவெடுக்கும் என்று அவர் அந்த சமயத்தில் கற்பனை செய்து கூட பார்த்து இருக்கமாட்டார். அவர் மட்டுமல்ல, மற்றவர்களும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எங்களது ஆதரவு தொடரும்.’ என்றார்.
    Next Story
    ×