search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியல் மாட்ரிட் அணியில் நீடிக்கிறேன்: உறுதிப்படுத்தினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
    X

    ரியல் மாட்ரிட் அணியில் நீடிக்கிறேன்: உறுதிப்படுத்தினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

    ரியல் மாட்ரிட் அணியில் நீடிக்கிறேன் என்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் வேறு அணிக்கு மாறுவார் என்ற வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.
    போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவரின் சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் லா லிகா தொடரைக் கைப்பற்றி அசத்தியது. வாரத்திற்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் ரொனால்டோ, அதோடு விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சரியாக வரி செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.



    இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி ஸ்பெயின் நீதிமன்றம் ரொனால்டோவிற்கு சம்மன் அனுப்பியது. இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிருப்தியடைந்தார். அத்துடன் ரியல் மாட்ரிட் அணியில் இருந்த விலகப்போவதாக தெரிவித்தார்.

    ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகுவதாக ரொனால்டோ தெரிவித்ததும், மான்செஸ்டர் யுனைடெட், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் அவருக்கு வலைவிரித்தன. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி முன்னணியில் இருந்தது. ரியல் மாட்ரிட் அணிக்கு முன்பாக ரொனால்டோ மான்செஸ்டர் அணிக்காக விளையாடியவர். ரொனால்டோவை இழுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த மான்செஸ்டர் யுனைடெட் மற்ற வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் தாமதம் காட்டியது.



    இந்நிலையில் தான் ரியல் மாட்ரிட் அணியில் நீடிப்பதாக ரொனால்டோ கூறியுள்ளார். இதுகுறித்து ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த ரொனால்டோ ‘‘கடந்த வருடம் என்னுடைய கிளப் முக்கியமான டிராபிகளை வென்றது மிகவும் சிறப்பானது. நான் அதை தனிப்பட்ட டிராபியாகத்தான் விரும்புகிறேன். அதை திரும்பவும் வென்றால் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

    ஒவ்வொரு வருடமும் கடுமையாக உழைக்க வேண்டும். நான் அதை தொடர்ந்து செய்வேன். கால்பந்து என்னுடைய வாழ்க்கை. அதுதான் என்னுடைய விருப்பம்’’ என்றார்.

    இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ரொனால்டோ மாறலாம் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×