search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் இன்று மோதல்
    X

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் இன்று மோதல்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று நத்தத்தில் நடக்கும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    திண்டுக்கல் :

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் 4-வது ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நத்தம் என்.பி.ஆர். பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    கடந்த ஆண்டு கடைசி இடத்தை பிடித்த மதுரை அணி, இந்த முறை வெற்றிக்கனியை பறிக்க போராடும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக ஏற்கனவே அணியில் இருந்த பல வீரர்கள் கழற்றிவிடப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிதாக வீரர்கள் களம் இறங்குகிறார்கள். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் பொய்யாமொழி, சுழற்பந்து வீச்சாளர் அஜித் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

    இதே போல, தன்னுடைய தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சிடம் தோல்வி கண்ட திண்டுக்கல் டிராகன்ஸ், 2-வது ஆட்டத்தில் வெற்றியை தனதாக்க களத்தில் ஆக்ரோஷம் காட்டும். பேட்டிங்கை பொறுத்தவரை முந்தைய ஆட்டத்தில் அரைசதம் அடித்து அசத்திய கங்காஸ்ரீதர்ராஜூ, இந்த முறையும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கலாம். விவேக்ராஜ் அதிரடி காட்ட தயாராக இருக்கிறார். பந்து வீச்சிலும் அந்த அணி பலத்தை நிரூபிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.



    இதற்கிடையே, நேற்று காலை நத்தத்தில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, நிருபர்களை சந்தித்த மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டன் அருண் கார்த்திக், பயிற்சியாளர் வித்யுத் ஆகியோர், ‘கடந்த ஆண்டு நடந்த தொடக்க போட்டி மூலம் நிறைய அனுபவங்களை பெற்றுள்ளோம். தற்போது, சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஆல்-ரவுண்டர்கள் எங்கள் வசம் இருக்கிறார்கள். இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ என்றனர்.

    இதே போல், திண்டுக்கல் அணியின் பொறுப்பு கேப்டன் அஸ்வின் வெங்கடராமன் கூறுகையில், ‘தொடக்க ஆட்டத்தில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்டோம். விவேக்கின் ‘ரன்-அவுட்’ எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த முறை கூடுதல் உத்வேகத்துடன் விளையாடுவோம். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் முழுமையாக கவனம் செலுத்துவோம்’ என்றார்.
    Next Story
    ×