search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீனிவாசன் பிசிசிஐ சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல்
    X

    ஸ்ரீனிவாசன் பிசிசிஐ சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல்

    மாநில கிரிக்கெட் சங்கத்தை சார்ந்திருக்கும் அதிகாரிகள் மட்டுமே பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்பதால் ஸ்ரீனிவாசனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று லோதா தலைமையிலான குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 70 வயதிற்கு மேற்பட்டோர் பதவி வகிக்கக்கூடாது, ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

    இந்த இரண்டு பரிந்துரைகள் உள்பட பல்வேறு பரிந்துரைகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் முன்னாள் பிசிசிஐ தலைவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவரும் ஆன ஸ்ரீனிவாசன் மற்றும் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த நிரஞ்சன் ஷா ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டது. இருவரும் 70 வயதை கடந்தவர்கள் என்பதால் தானாகவே பதவியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    ஆனால், மாநில சங்கங்கள் லோதா தலைமையிலான பரிந்துரைகளை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக வினோத் ராய் தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்த குழுவால் பிசிசிஐ அதிகாரிகளை எதிர்கொள்ள முடியவில்லை.

    கடந்தமுறை நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஸ்ரீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இது நிர்வாகக் குழுவிற்கு அதிருப்தியை அளித்தது. இருவரும் லோதா பரிந்துரைகளை அமல்படுத்துவதை தடுக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் வினோத் ராய் புகார் அளித்தார்.

    அப்போது, ஸ்ரீனிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோருக்கு வினோத் ராய் புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது.



    இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், மாநில சங்கங்களை சார்ந்திருக்கும் அதிகாரிகள் மட்டுமே 26-ந்தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில பங்கேற்க முடியும் என்று தெரிவித்தது.

    மேலும், ‘அனைத்து மாநில சங்கங்களும் லோதா பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய பரிந்துரைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்படும். அத்துடன் நிர்வாகக்குழுவில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 18-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் ஸ்ரீனிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோர் நாளை மறுநாள் (26-ந்தேதி) நடக்கும் பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×