search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதிப் போட்டி: இந்தியாவின் வெற்றிக்கு 229 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
    X

    இறுதிப் போட்டி: இந்தியாவின் வெற்றிக்கு 229 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

    பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 229 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து.
    இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் பெண்கள் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வின்பீல்டு, பியுமோன்ட் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.

    இந்திய வீராங்கனைகளில் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு இருவரும் விளையாடினார்கள். அதிரடியாக விளையாட முடியாவிட்டாலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது.


    3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய கோஸ்வாமி

    12-வது ஓவரை கயாக்வார்டு வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் வின்பீல்டு அவுட் ஆனார். அவர் 24 ரன்கள் சேர்த்தார். அடுத்து சாரா டெய்லர் களம் இறங்கினார். 15-வது ஓவரை பூனம் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பியுமோன்ட் ஆட்டம் இழந்தார். இவர் 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு டெய்லர் உடன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்தார். நைட் 1 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    முதல் 10 ஓவரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்து தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால், சற்று தடுமாற்றம் அடைந்தது.

    அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு டெய்லர் உடன் ஸ்சிவர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார்கள். இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 146 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டெய்லர் 45 ரன்கள் எடுத்த நிலையில் கோஸ்வாமி பந்தில் ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு டெய்லர், ஸ்சிவர் உடன் இணைந்து 83 ரன்கள் சேர்த்தார்.



    5-வது விக்கெட்டாக களம் இறங்கிய வில்சனை முதல் பந்திலேயே கோஸ்வாமி பெவிலியன் திருப்பினார். இதனால் இங்கிலாந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    இரண்டு விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் மறுமுனையில் ஸ்சிவர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 ரன்கள் எடுத்த நிலையில் கோஸ்வாமி பந்தில் ஆட்டம் இழந்தார். மிடில் ஓவர்களில் கோஸ்வாமி சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்தின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்.

    அடுத்து வந்த ப்ருன்ட் 42 பந்தில் 34 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஜெனி கன் 25 ரன்னும், லாரா மார்ஷ் 14 ரன்னும் எடுத்து கடைசி வரை போராட இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்துள்ளது.



    இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீராங்கனை கோஸ்வாமி 10 ஓவரில் 23 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களும், பூனம் யாதவ் 10 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் பேட்டிங் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×