search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். போட்டியை போன்று தமிழ்நாடு பிரிமீயர் லீக்கும் விறுவிறுப்பாக இருக்கும்: சேப்பாக் வீரர் கோபிநாத் பேட்டி
    X

    ஐ.பி.எல். போட்டியை போன்று தமிழ்நாடு பிரிமீயர் லீக்கும் விறுவிறுப்பாக இருக்கும்: சேப்பாக் வீரர் கோபிநாத் பேட்டி

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர் 20 ஓவர் போட்டியாக இருப்பதால் ஐ.பி.எல். போன்று விறுவிறுப்பாக இருக்கும் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நெல்லை சங்கர்நகர் இந்தியா சிமெண்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கும் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன.

    நாளை (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருவள்ளுர் வீரன்ஸ் அணியும் விளையாடுகின்றன. இந்த அணிகளின் வீரர்கள் சங்கர்நகர் மைதானத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பயிற்சியில் ஈடுபட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் கோபிநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    நான் தொடக்க வீரராக களம் இறங்குகிறேன். எங்கள் அணி வீரர்கள் நன்றாக பயிற்சி பெற்று வருகிறார்கள். எங்கள் அணியையும் சேர்த்து மொத்தம் 8 அணிகள் களத்தில் நிற்கின்றன. இது 20 ஓவருக்கான போட்டியாக இருப்பதால் ஐ.பி.எல். போன்று விறுவிறுப்பாக இருக்கும். அனைத்து அணிகளும் சமபலமாக இருப்பதாலும், அனைத்து போட்டிகளும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    எங்கள் அணியில் சுதீஷ், ராதாகிருஷ்ணன் என 2 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 3 ஆல்-ரவுண்டர்களும் இருக்கிறார்கள். இந்த முறை வெற்றி வாய்ப்பை நழுவ விடமாட்டோம். எங்கள் அணியின் பயிற்சியாளர் சிறந்த முறையில் எங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். நாங்களும் கடினமான முறையில் நன்றாக பயிற்சி பெற்று வருகிறோம். எங்கள் அணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை கிங்ஸ் அணி கேப்டன் சையது முகமது நிருபர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் 2-வது ஆண்டாக களம் இறங்குகிறோம். கடந்த முறை ஏற்பட்ட அனுபவம் பாடமாக எடுத்துக் கொண்டு, நல்லமுறையில் பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறோம். அனைத்து அணிகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் எங்கள் விளையாட்டு இருக்கும்” என்றார்.

    திருவள்ளுர் வீரன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ராகின்ஷா கூறுகையில், “நெல்லை மைதானத்தில் காற்று அதிகமாக வீசுகிறது. எனவே அதை சமாளிக்கும் வகையில் பந்து வீச வேண்டும். கடந்த ஆண்டு செய்த தவறுகளை சரி செய்து, சிறந்த முறையில் பந்து வீசுவோம். இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் பலம் வாய்ந்தவைதான்” என்றார்.

    காரைக்குடி காளை அணி வீரர் சீனிவாசன் கூறுகையில், “எங்களது அணியில் 5 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் 14 வயதுடைய நிவேதன் அடங்குவார். அவர் 2 கைகளாலும் பந்து வீசக்கூடிய திறமை பெற்றவர். சென்னை மைதானத்தை போல் நெல்லை மைதானத்திலும் அனைத்து வசதிகளும் உள்ளன. கடந்த ஆண்டு விளையாடியபோது நெல்லை மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.

    இந்த போட்டியில் கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் எங்களுக்கு சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.
    Next Story
    ×