search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுருக்கு, ஆஸ்திரேலிய துணை கேப்டன் பிளாக்வெல் பனியனை நினைவுப்பரிசாக வழங்கினார்
    X
    இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுருக்கு, ஆஸ்திரேலிய துணை கேப்டன் பிளாக்வெல் பனியனை நினைவுப்பரிசாக வழங்கினார்

    கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்தேன்: ஹர்மன்பிரீத் கவுர்

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 171 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்து காட்டியிருப்பதாக கூறியிருக்கிறார்.
    டெர்பி:

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் டெர்பியில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மழையால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 171 ரன்கள் (115 பந்து, 20 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி அமர்க்களப்படுத்தினார்.

    தொடர்ந்து விளையாடிய 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 40.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எலிசி விலானி (75 ரன்), அலெக்ஸ் பிளாக்வெல் (90 ரன்) ஆகியோரின் போராட்டத்துக்கு பலன் இல்லை. லண்டன் லார்ட்சில் நாளை அரங்கேறும் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

    அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியர்களை மிரள வைத்த ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது:-

    எதிர்முனையில் நின்ற தீப்தி ஷர்மாவிடம் (25 ரன்), ‘ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுத்து ஒத்துழைப்பு தந்தால் போதும், நீங்கள் நெருக்கடிக்குள்ளாக வேண்டாம். நான் அடித்து விளையாடுகிறேன்’ என்று கூறினேன். அவரும் சொன்னதை சரியாக செய்தார். இந்த உலக கோப்பையில் பேட் செய்வதற்கு அதிகமான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதனால் கிடைக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று விரும்பினேன். கடவுளின் அருளால் எல்லாம் நான் நினைத்தபடியே நடந்தது.

    எதுவும் முன்கூட்டியே திட்டமிடவில்லை. பந்தை கணித்து விரட்டியடிக்க வேண்டும். அந்த அணுகுமுறையுடன் பேட்டை சுழற்றினேன். பொதுவாக ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுப்பது எனக்கு பிடிக்கும். ஆனால் பவுண்டரிகள் அடிக்கும் போது நம்பிக்கை கிடைக்கும். அது போலவே சிக்சர், பவுண்டரிகள் விளாசிய போது, அது எனது நம்பிக்கைக்கு வலுவூட்டுவதாக அமைந்தது.

    எனது வாழ்க்கையில் நான் விளையாடிய மிகச்சிறந்த ஆட்டம் இது தான். மேலும் ஒரு நாள் போட்டியில் எனது அதிகபட்ச ஸ்கோரும் இதுவே. உண்மையிலேயே களத்தில் அனுபவித்து பேட்டிங் செய்தேன்.

    இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

    இந்திய கேப்டன் மிதாலிராஜ் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான விஷயமல்ல. இது மிகப்பெரிய சாதனையாகும். அசாதாரணமான ஒரு இன்னிங்சை ஹர்மன்பிரீத் கவுர் ஆடியிருக்கிறார். ஒரு இந்தியராக நான் பார்த்த சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்றாகும்.

    லண்டன் லார்ட்சில் இறுதிப்போட்டியில் விளையாட இருப்பதால் ஒவ்வொரு வீராங்கனைகளும் மகிழ்ச்சியுடன் உணர்வுபூர்வமான நிலையில் இருக்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த கோப்பையை வென்றால் அது இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கு உதவிகரமாக இருக்கும்.

    இங்கிலாந்து அணிக்கு இறுதி ஆட்டம் நிச்சயம் எளிதாக இருக்காது. ஆனால் குறிப்பிட்ட நாளில் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். முதலாவது லீக் ஆட்டத்தில் எங்களிடம் தோற்ற இங்கிலாந்து அணி அதன் பிறகு எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று உச்சத்துக்கு வந்து இருக்கிறது. மேலும் இது அவர்களது சொந்த நாடு. அதனால் கடும் சவால் இருக்கப்போகிறது. ஆனால் அதை சமாளிக்கக்கூடிய திறமை எங்களிடம் இருக்கிறது’ என்றார்.

    பஞ்சாப் மாநிலம் மோகாவில் உள்ள ஹர்மன்பிரீத் கவுரின் வீட்டில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டது. அவரது தந்தை ஹர்மந்தர்சிங் கூறுகையில், ‘எனது மகளின் சாதனையால் நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமே பெருமைப்படுகிறது. நிச்சயம் உலக கோப்பையை வெல்வோம் என்று அவர் எனக்கு உறுதி அளித்திருக்கிறார்’ என்றார்.

    ஹர்மன்பிரீத் கவுரின் சகோதரியும், ஆங்கில ஆசிரியையுமான ஹேம்ஜித் கவுர் கூறும் போது, ‘பேட்டிங்கில் ஷேவாக் தான் ஹர்மன்பிரீத் கவுரின் முன்மாதிரி. ஷேவாக் மாதிரி பேட் செய்வார். விராட் கோலி போன்று ஆக்ரோஷம் காட்டுவார். ஆனால் களத்திற்கு வெளியே அமைதியாக இருப்பார்’ என்றார். 
    Next Story
    ×