search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்த தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளும் சவாலானவை: சேப்பாக் அணி வீரர் அந்தோணிதாஸ்
    X

    இந்த தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளும் சவாலானவை: சேப்பாக் அணி வீரர் அந்தோணிதாஸ்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2-வது தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளும் சவாலானவை என்று நெல்லையில் சேப்பாக் அணி வீரர் அந்தோணிதாஸ் கூறினார்.
    நெல்லை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் நெல்லை சங்கர்நகர் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. முதல் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன.

    நாளை மறுநாள் (திங்கட் கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருவள்ளூர் வீரன்ஸ் அணியும் மோதுகின்றன. இதையொட்டி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்களும், கோவை கிங்ஸ் அணி வீரர்களும் நேற்று நெல்லைக்கு வந்தனர். அவர்கள் நெல்லை சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமெண்டு மைதானத்தில் வலை பயிற்சி மேற்கொண்டனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ஹேமங் பதானி பயிற்சி அளித்தார்.

    பயிற்சியில் ஈடுபட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் அந்தோணி தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன். மீன்பிடி தொழில் செய்து வந்த போதிலும், கிரிக்கெட் மீது ஏற்பட்ட ஆர்வத்தில் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டேன். தினமும் 8 மணி நேரம் பயிற்சி செய்வேன். கடந்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு நெல்லையில் நடந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு நழுவிவிட்டது. ஆனால் இந்த ஆண்டு கடும் உழைப்பை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. அனைத்து அணிகளுக்கும் தூத்துக்குடி அணி சவால் நிறைந்ததாக இருக்கும். ஆனாலும் நாங்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக கடும் பயிற்சி செய்து வருகிறோம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தற்போது ராதாகிருஷ்ணன், சுதீஷ் ஆகிய புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அந்தோணி தாஸ் கூறினார். 
    Next Story
    ×