search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சென்னையில் இன்று தொடக்கம்
    X

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சென்னையில் இன்று தொடக்கம்

    8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    ஐ.பி.எல். பாணியில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு உதயம் ஆனது. தலைநகர் மட்டுமின்றி மாவட்ட, கிராமங்கள் அளவில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளிஉலகுக்கு கொண்டு வருவதே இந்த போட்டியின் முக்கிய நோக்கமாகும். ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற முதலாவது சீசனில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டி.என்.பி.எல். போட்டியில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்றனர்.

    இந்த நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் ஆதரவுடன் 2-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடத்தப்படுகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    முன்னணி ஆட்டக்காரர்கள் அபினவ் முகுந்த் (தூத்துக்குடி அணி), ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்) ஆகியோர் இலங்கை தொடருக்கு சென்று இருப்பதால் இப்போதைக்கு விளையாட வாய்ப்பு இல்லை. காயத்தால் அவதிப்படும் முரளிவிஜய்க்கு (கோவை கிங்ஸ்) ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய தினேஷ் கார்த்திக்கை (தூத்துக்குடி) 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அணியின் பிசியோதெரபிஸ்ட் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அவரும் தொடக்ககட்ட ஆட்டங்களில் விளையாடமாட்டார்.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சும், திண்டுக்கல் டிராகன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தினேஷ் கார்த்திக் இல்லாததால் தூத்துக்குடி கேப்டனாக ஆனந்த் சுப்பிரமணியன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சிம்மசொப்பனமாக விளங்கிய தூத்துக்குடி அணி எந்த வீரர்களையும் கழற்றி விடாமல் தக்கவைத்துக் கொண்டது. ஆனால் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் இல்லாததால் நிச்சயம் அவர்களுக்கு பின்னடைவு தான்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஆர்.அஸ்வின் ஆடமாட்டார் என்பதால் கேப்டன் பொறுப்பை அஸ்வின் வெங்கடராமன் கவனிப்பார். கடந்த ஆண்டு முதல் 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று பயணத்தை கம்பீரமாக தொடங்கிய திண்டுக்கல் அணி அதே போல் இந்த முறையும் வெற்றியுடன் தொடங்குவதை எதிர்நோக்கியுள்ளது. இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 2 ஆட்டங்களில் மோதி உள்ளன. அதில் இரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி: ஆனந்த் சுப்பிரமணியன் (கேப்டன்), அவுசிக் ஸ்ரீனிவாஸ், அஸ்வின் கிறிஸ்ட், ஆகாஷ் சும்ரா, கணேஷ் மூர்த்தி, கவுசிக் காந்தி, லட்சுமண், மாருதி ராகவ், நாதன், சுஷில், சத்யநாராயணன், விஷால், எல்.பாலாஜி, நிகுல் ஆனந்த், சித்தார்த் அகுஜா, வாஷிங்டன் சுந்தர், அதிசயராஜ் டேவிட்சன்.

    திண்டுக்கல் டிராகன்ஸ்: அஸ்வின் வெங்கடராமன் (கேப்டன்), சுப்பிரமணியசிவா, முருகன் அஸ்வின், கங்கா ஸ்ரீதர் ராஜூ, டி.நடராஜன், சன்னிகுமார் சிங், வில்கின்ஸ் விக்டர், அபிஷேக், ஆதித்ய அருண், ஜெகதீசன், சஞ்சய், சிலம்பரசன், விவேக், அருண்மொழி, முகுந்த், கிஷன் குமார், தினேஷ், ஆரிப்.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×