search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட்: சென்னையில் நாளை தொடக்கம்
    X

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட்: சென்னையில் நாளை தொடக்கம்

    எட்டு அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ் நாடு பிரிமீயர் ‘லீக்’ (டி.என்.பி.எல்.) 20 ஓவர் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்தப்போட்டி சிறந்த களமாக அமைந்தது.

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 20-ந்தேதி வரை இந்தப்போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

    இந்தியா சிமெண்ட்ஸ் ஆதரவுடன் நடைபெறும் டி.என்.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    ஐ.பி.எல். போட்டி போலவே ‘பிளேஆப்’ முறை தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும் விளையாடும். இந்த ஆட்டம் சென்னையில் ஆகஸ்ட் 15-ந்தேதி நடைபெறும்.

    எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த அணியும், 4-வது இடத்தை பிடித்த அணியும் மோதும். இந்த ஆட்டம் ஆகஸ்ட் 16-ந்தேதி திண்டுக்கல்லில் நடக்கிறது. ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் ‘குவாலிபையர்1’-ல் தோல்வி அடையும் அணியும், எலிமினேட்டரில் வெல்லும் அணியும் மோதும். இந்த ஆட்டம் நெல்லையில் ஆகஸ்ட் 18-ந்தேதி நடைபெறும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 20-ந்தேதி சென்னையில் நடக்கிறது.

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியின் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (சனி) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- அஸ்வின் வெங்கட்ராமன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே திறமை வாய்ந்த அணி என்பதால் தொடக்க ஆட்டமே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆர்.சதீஷ், கோபிநாத், தலைவன் சற்குணம், சாய் கிஷோர், அந்தோணி தாஸ், சரவணன் ஆகிய சிறந்த வீரர்களை கொண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அறிமுக டி.என்.பி.எல். போட்டியில் 2-வதுஇடத்தை பிடித்து முத்திரை பதித்தது.

    எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.சுதீஷ் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் புதிய வரவுகள். இதில் ராதாகிருஷ்ணன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம் பெற்று இருப்பவர். இதனால் அவர் மிக அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    கடந்த முறை இடம் பெற்ற ரஜீல் அப்துல்ரகுமான், நிர்மல்குமார், வாசுதேன், ஷிபி ஜவகர் ஆகிய 4 வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் 24-ந்தேதி நெல்லையில் நடக்கிறது.

    2-வது ஆட்டத்தில் கோவை கிங்சையும் (29-ந்தேதி, சென்னை), 3-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்டியாட்சையும் (ஆகஸ்ட் 1-ந்தேதி, நெல்லை), 4-வது ஆட்டத்தில் காரைக்குடி காளையையும் (ஆகஸ்ட் 4-ந்தேதி, சென்னை), 5-வது ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெய்ன்ட்டையும் (ஆகஸ்ட் 6-ந்தேதி, சென்னை), 6-வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்சையும் (ஆகஸ்ட் 9-ந்தேதி, திண்டுக்கல்), கடைசி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சையும் (ஆகஸ்ட் 13-ந்தேதி, திண்டுக்கல்) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எதிர்கொள்கிறது.

    நிவேதன் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், திரிலோக்நாத், ஹிகர் ஹீகடு, தீபன், மோகித் ஹரிகரன் ஆகாஷ் போன்ற இளம் வீரர்கள் இந்த டி.என்.பி.எல். போட்டியில் முதல் முறையாக ஆடுகிறார்கள்.

    டி.என்.பி.எல். போட்டியில் விளையாடிய பிறகு தமிழக அணி தியோதர் டிராபி, விஜய் ஹசாரே டிராபியை கைப்பற்றினார்கள். மேலும் ரஞ்சி டிராபியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இதனால் நாளைய தொடரும் 2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியை வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

    இந்தப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டார் விஜய் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
    Next Story
    ×