search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அறிமுகம் - தெண்டுல்கர், கமல்ஹாசன் பங்கேற்பு
    X

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அறிமுகம் - தெண்டுல்கர், கமல்ஹாசன் பங்கேற்பு

    புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    சென்னை:

    5-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), மும்பை- புனே (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி 12 இடங்களில் அரங்கேறுகிறது. இதன் இறுதிப்போட்டி சென்னையில் அக்டோபர் 28-ந் தேதி நடக்கிறது.

    புரோ கபடி போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்டு தமிழ் தலைவாஸ் அணி முதல்முறையாக கலந்து கொள்கிறது. தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் அணியின் தூதரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு அணியின் சீருடை மற்றும் லோகோவை அறிமுகப்படுத்தினார். அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் மற்றும் கேப்டன் அஜய் தாகூர் உள்பட 24 வீரர்களும் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தோன்றிய வீர விளையாட்டான கபடி போட்டி உலகம் முழுவதும் பரவும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் தலைவாஸ் அணியினருடன் இணைந்து செயல்பட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்து கமல்ஹாசன் கூறியதாவது:-

    நமது பாரம்பரியத்துடன் கலந்த கபடி விளையாட்டு எனக்கு பிடிக்கும். நடிக்க வந்து இருக்காவிட்டால் நான் கபடி விளையாடி இருப்பேன். சினிமா படப்பிடிப்பில் ஓய்வு நேரங்களில் நான் ஸ்டண்ட் கலைஞர்களுடன் இணைந்து கபடி விளையாடுவது உண்டு. அப்படி விளையாடுகையில் ஒரு முறை எனக்கு மூக்கு உடைந்து விட்டது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியதானது. இதையடுத்து சினிமா டைரக்டர் ஒருவர் கபடி விளையாட எனக்கு தடை விதித்து விட்டார். தற்போது கபடி அணியின் தூதராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணிக்கு தமிழ் தலைவாஸ் என்று பன்மையில் பெயர் வைத்து இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. சமீபத்தில் எல்லாம் ஒருமையில் பேசுவது வழக்கமாகி வருகிறது. நான் ஏதாவது தப்பா சொல்லி விட்டேனா?. தலைவாஸ் என்பதன் அர்த்தம் எல்லோரும் இந்நாட்டு மன்னரே.

    தமிழ்நாடு மற்றும் இந்திய கலாசாரத்தில் உள்ள பழைய வீர விளையாட்டு எல்லாமே அமைதியான காலத்தில் போரை மறந்து விடாமல் இருக்க நினைவு படுத்தும் அம்சமாகும். அலகு குத்துதல் கூட அதற்கு தான் என்று நினைக்கிறேன். ஏனெனில் முதல் ரத்தத்தை பார்த்ததும் பயந்துவிடுவது குணாதிசயமாக ஆகிவிடக்கூடாது என்பதற்கு தான். அதன் அடிப்படையிலேயே மோதுதல், ஏறு தழுவுதல் ஆகிய விளையாட்டுகளை தொடர்ந்து சொல்லி கொடுத்து வந்து இருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியும் வந்ததே அதற்கு தான் என்று சொல்வார்கள்.

    இந்திய விளையாட்டின் மூத்த அண்ணனாக விளங்கும் கிரிக்கெட்டின் ஜாம்பவானான தெண்டுல்கர் கபடியை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இது கபடிக்கு கிடைத்த பெருமையாகும். இதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். கபடி, சடுகுடு உள்ளிட்ட பல பெயர்களில் நாடெங்கும் இருக்கும் இந்த கபடி விளையாட்டை நாம் மறந்து போனது என்பது மிகுந்த சோகமாகும். இந்த விளையாட்டை தெண்டுல்கர் போன்றவர்கள் கையில் எடுத்து இருப்பது மிகுந்த சந்தோஷமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான தெண்டுல்கர் பேசுகையில், ‘மும்பையில் நடந்த கபடி போட்டியை நேரில் பார்க்கையில் தான் இந்த ஆட்டத்துக்கு எவ்வளவு வேகம், திறன் தேவை என்பதை அறிந்து வியந்தேன். தற்போது இந்திய இளைஞர்களில் அதிகமானவர்கள் உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். இளைஞர்களுக்கு நான் விடுக்கும் ஒரு வேண்டுகோள் என்னவெனில் ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட்டு உடல் தகுதியை பராமரியுங்கள். நான் ஒரு கனவு கபடி அணியை தேர்ந்தெடுத்தால் அதில் தற்காப்பு ஆட்டக்காரராக இந்திய கிரிக்கெட் வீரர் டோனியையும், ரைடராக பாடகர் சங்கர் மகாதேவனையும் தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் கபடியில் சிறப்பாக செயல்பட உடல் வலிமை மற்றும் மூச்சு பயிற்சி முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

    விழாவில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்கள் நிம்மகட்டா பிரசாத், அல்லு அரவிந்த், அல்லு அர்ஜூன், ராம் சரண், தெண்டுல்கரின் மனைவி அஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×