search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது இனிமேலாவது நிறுத்தப்பட வேண்டும்: ஹர்மன்ப்ரீத் கவுர் தாயார்
    X

    பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது இனிமேலாவது நிறுத்தப்பட வேண்டும்: ஹர்மன்ப்ரீத் கவுர் தாயார்

    பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கப்படுவது இனிமேலாவது நிறுத்தப்பட வேண்டும் என ஹர்மன் ப்ரீத் கவுரின் தாயார் சுக்ஜித் கவுர் தெரிவித்துள்ளார்.
    சண்டிகர்:

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்கள் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

    மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 42 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி 115 பந்துகளில் 20 பவுண்டரி, 7 சிக்சருடன் 171 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

    அதன்பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

    அரை இறுதியில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்த வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா மாவட்டத்தில் வசிக்கும் அவரது குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக ஹர்மன்ப்ரீத் கவுரின் தந்தை கூறுகையில், ’’தொடர்ந்து அவர் தனது இதுபோன்ற பங்களிப்பை அளித்து வந்தால் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும். அது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமையும்’’ என தெரிவித்துள்ளார்.

    ஹர்மன்ப்ரீத் கவுரின் தாயார் சுக்ஜித் கவுர் கூறுகையில், ’’பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை ஹர்மன்ப்ரீத் கவுர் மீண்டும் நிரூபித்துள்ளார். எனவே, கருவிலேயே பெண் குழந்தைகளை அழிக்கும் செயல்களை இனிமேலாவது நிறுத்த வேண்டும். எனது மகளின் ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது. மற்ற பெண்கள் இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என கூறினார்.
    Next Story
    ×