search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டம்: பேட்டிங்கில் கவனம் செலுத்தும் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல்
    X

    பயிற்சி ஆட்டம்: பேட்டிங்கில் கவனம் செலுத்தும் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல்

    இலங்கை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் பேட்டிங் மீது கவனம் செலுத்த இருக்கிறார்கள்.
    மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கு ஏற்ற வகையில் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் நாளை இந்திய அணி, இலங்கை பிரசிடென்ட் லெவன் அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதுதான் அனைவருடைய ஆர்வமாக உள்ளது.

    ரோகித் சர்மா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பின் டெஸ்ட் போட்டியில் விளையடியது கிடையாது. காலில் செய்து கொண்ட ஆபரேசன் காரணமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காள தேச தொடர்களில் விளையாடவில்லை.

    ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பிடித்தார். இலங்கை தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை இந்தியா 6 பேட்ஸ்மேன்களுடன் விளையாடினால் ரோகித் சர்மா கட்டாயம் இடம்பெறுவார். கருண் நாயர் சொதப்பியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. அப்படி இடம்பிடித்தால் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதால் பயிற்சி ஆட்டத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட முயற்சி செய்வார்.

    லோகேஷ் ராகுல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 7 இன்னிங்சில் 6 அரைசதங்கள் அடித்து அசத்தியவர். இந்த தொடரின்போது இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்கு ஆபரேசன் செய்து கொண்ட லோகேஷ் ராகுல் ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் டிராபி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கவில்லை. உள்ளூர் தொடரிலும் விளையாடவில்லை.

    இதனால் லோகேஷ் ராகுலும் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். மேலும், தோள்பட்டை காயம் குணமடைந்து விட்டதா? என்பதை இந்திய அணியும் ஆராய வேண்டியுள்ளது.

    பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவை தவிர மற்ற வீரர்களான இசாந்த் ஷர்மா, மொகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் இவர்களுக்கு முழு வாய்ப்பு வழங்கப்பட்டு பரிசோதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×