search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சினை நியமனம் செய்யலாம்: ரவிசாஸ்திரி பரிந்துரை
    X

    இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சினை நியமனம் செய்யலாம்: ரவிசாஸ்திரி பரிந்துரை

    இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை நியமனம் செய்யலாம் என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பரிந்துரை செய்துள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்திய அணிக்கு ஏற்கனவே இயக்குனராக இருந்த அவர், 2019 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இருப்பார்.

    இதற்காக அவருக்கு 7.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே பெற்றதைவிட, ரூ.1.25 கோடி அதிகமாகும்.

    ரவிசாஸ்திரியின் கருத்தை ஏற்று, அவரது விருப்பத்துக்கு ஏற்றவாறு பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருணும், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கரும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    ரவிசாஸ்திரி முன்பு அணியின் இயக்குனராக இருந்தபோது உள்ள குழு அப்படியே இடம் பெறுகிறது. ரவிசாஸ்திரி தனக்கு வேண்டிய உதவியாளர்களை தனது விருப்பப்படியே கிரிக்கெட் வாரியத்தின் மூலம் நியமனம் செய்ய வைத்துள்ளார்.

    இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை நியமனம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.

    கிரிக்கெட் வாரிய தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சவுத்ரி, நிர்வாக குழு உறுப்பினர் டயனா எடுல்ஜி, தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி ஆகியோர் கொண்ட 4 பேர் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.



    கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாக குழு உறுப்பினர்கள் கூறுகையில், “இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சினை நியமனம் செய்யலாம் என ரவிசாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவால் அணியில் எந்தவிதமான கருத்து மோதலும் ஏற்படக்கூடாது என வலியுறுத்தி உள்ளோம். இந்த பொறுப்பை சச்சின் ஏற்றுக்கொள்வதால், ஐ.பி.எல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவரது கவனம் தடைபடக் கூடாது. பேட்டிங் ஆலோசகர் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 25 நாட்களாவது அணியுடன் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும். அப்படி பங்கெடுக்கவில்லை என்றால் அணியின் மற்ற பணிகளில் தொய்வு ஏற்படும் என சாஸ்திரியிடம் உறுதியாக தெரிவித்துள்ளோம்’’ என தெரிவித்தனர்.

    ஏற்கனவே, கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழுவில் சச்சின் தெண்டுல்கர் உள்பட சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×