search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தை 133 ரன்னில் சுருட்டி 340 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி
    X

    இங்கிலாந்தை 133 ரன்னில் சுருட்டி 340 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி

    டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்தை 133 ரன்னில் சுருட்டி, தென்ஆப்பிரிக்கா அணி 340 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 119 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது.


    பிளாண்டர் பந்தில் பேலன்ஸ் எல்.பி.டபிள்யூ. ஆகிய காட்சி

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் கடந்த 14-ந்தேதி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அம்லா (78), டி காக் (68), பிளாண்டர் (54) ஆகியோரின் அரைசதத்தால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 335 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


    அவுட்டாகிய விரக்தியில் பென் ஸ்டோக்ஸ்

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 205 ரன்னில் சரணடைந்தது. கேப்டன் ஜோ ரூட் 78 ரன்னும், பேர்ஸ்டோவ் 45 ரன்னும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் கிறிஸ் மோரிஸ், மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.


    பவுன்சர் பந்தில் திணறிய அலஸ்டைர் குக்

    பின்னர் 130 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் டீன் எல்கர் (80), அம்லா (87), டு பிளிசிஸ் (63) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


    ஸ்டம்பை பறிகொடுத்த ஜென்னிங்ஸ்

    ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தை விட 473 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 474 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்து தென்ஆப்பிரிக்கா.

    474 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 ஓவர்களை சந்தித்து விக்கெட் இழக்காமல் 1 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.


    ஜோ ரூட்டை போல்டாக்கிய சந்தோசத்தில் கிறிஸ் மோரிஸ்


    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரின் கடைசி பந்தில் ஜென்னிங்ஸ் பிளாண்டர் பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    அடுத்து வந்த பேலன்ஸ் 4 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 8 ரன்னிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    முறுமுனையில் விளையாடிய குக் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 16 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 18 ரன்னிலும், மொயீன் அலி 27 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கடைநிலை வீரர்கள் பிராட் (5), வுட் (0), ஆண்டர்சன் (0) அடுத்தடுத்து வெளியேற இங்கிலாந்து அணி 44.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.


    ஆட்ட நாயகன் விருது பெற்ற பிளாண்டரின் செயல்பாடு

    இதனால் தென்ஆப்பிரிக்கா 340 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பி்ரிக்கா அணி சார்பில் பிளாண்டர், மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களும், ஆலிவர் மற்றும் மோரிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் வருகிற 27-ந்தேதி ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
    Next Story
    ×