search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 377 ரன்கள் குவிப்பு: இலங்கை வெற்றிக்கு 388 ரன்கள் இலக்கு
    X

    ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 377 ரன்கள் குவிப்பு: இலங்கை வெற்றிக்கு 388 ரன்கள் இலக்கு

    கொழும்பில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே.
    இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பில் நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அந்த அணி எர்வின் (160) சதத்தால் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 346 ரன்னி்ல் ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 10 ரன்கள் முன்னிலையுடன் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. சிகந்தர் ரசா 97 ரன்களுடனும், மால்கம் வாலர் 57 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


    48 ரன்கள் அடித்த ஜிம்பாப்வே கேப்டன் கிரிமர்

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சிகந்தர் ரசா சதத்தை தொட்டார். வாலர் 68 ரன்கள் எடுத்த நிலையில் பெரேரா பந்திலும், சிகந்தர் ரசா 127 ரன்கள் எடுத்த நிலையில் ஹெரத் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

    அடுத்து வந்த கேப்டன் கிரிமர் 48 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் 107.1 ஓவரில் 377 ரன்கள் குவித்தது.


    2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஹெரத்

    முதல் இன்னிங்சில் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஒட்டுமொத்தமாக 387 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 388 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    இலங்கை அணி சார்பில் ஹெரத் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 23 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×