search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன்
    X

    விம்பிள்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன்

    விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார்.
    இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 10-ம் நிலை வீராங்கனையான 37 வயதான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், 14-ம் நிலை வீராங்கனையான 23 வயதே ஆன ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசாவும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.



    முதல் செட்டில் இருவரும் மாறிமாறி கேம்-ஐ கைப்பற்றினார்கள். இதனால் 10 கேம்கள் முடிவில் இருவரும் 5-5 என சமநிலையில் இருந்தனர்.

    11-வது கேம்-ஐ வீனஸ் வில்லியம்ஸ் தொடங்கினார். இதில் வீனஸின் சர்வீஸ்களை திறமையாக எதிர்கொண்டு கேம்-ஐ முகுருசா அருமையாக கைப்பற்றினார். இதனால் முகுருசா 6-5 என முன்னிலைப் பெற்றார். 12-வது கேம்-ஐ தொடங்கிய முகுருசா சிறப்பாக முடித்தார். இதனால் முதல் செட்டை முகுருசா 7-5 எனக் கைப்பற்றினார்.



    முதல் செட்டில் அடைந்த தோல்வியில் இருந்து வீனஸ் மீள்வதற்கு நேரம் கொடுக்காமல் 2-வது செட்டில் அதிரடி தாக்குதலை நடத்தினார் முகுருசா. இதனால் ஒரு கேம்-ஐ கூட வீனஸ் வில்லியம்ஸை கைப்பற்ற விடாமல் 6-0 என 2-வது செட்டை கைப்பற்றினார் முகுருசா.



    இதனால் 2-0 என நேர்செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருசா முதன்முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இந்த வெற்றியை பெற முகுருசாவிற்கு ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    23 வயதாகும் முகுருசா இதற்கு முன் 2016-ல் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார். இது 2-வது கிராண்ட்ஸ்லாம் ஆகும்.
    Next Story
    ×