search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எர்வின் சதத்தால் இலங்கைக்கு எதிராக ஜிம்பாப்வே முதல் நாளில் 344 ரன்கள் குவிப்பு
    X

    எர்வின் சதத்தால் இலங்கைக்கு எதிராக ஜிம்பாப்வே முதல் நாளில் 344 ரன்கள் குவிப்பு

    கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் எர்வினின் அபார சதத்தால் ஜிம்பாப்வே 344 ரன்கள் குவித்துள்ளது.
    ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 என கைப்பற்றி ஜிம்பாப்வே அணி சரித்திர சாதனைப் படைத்தது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று கொழும்பில் தொடங்கியது. இலங்கை அணி சண்டிமல் தலைமையிலும், ஜிம்பாப்வே கிரிமர் தலைமையிலும் களம் இறங்கியது.



    ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரிமர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் மசகட்சா, ரெகிஸ் சகப்வா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சகப்வா 12 ரன்னிலும், மசகட்சா 19 ரன்னிலும், அடுத்து வந்த அறிமுக வீரர் முசகண்டா 6 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் ஜிம்பாப்வே அணி 38 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது வீரராக களம் இறங்கிய எர்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்தினார். இவருடன் ஐந்தாவது நபராக களம் இறங்கிய வில்லியம்ஸ் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார். இருந்தாலும் வில்லியம்ஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஜிம்பாப்வே 4 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு எர்வின் உடன் சிகந்தர் ரசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இந்த ஜோடி 76 பந்தில் 50 ரன்களை சேர்த்தது. எர்வின் 78 பந்தில் அரைசதம் அடித்தார்.

    அணியின் ஸ்கோர் 154 ரன்னாக இருக்கும்போது சிகந்தர் ரசா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த மூர் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆனால், 7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய வாலர் 36 ரன்கள் சேர்த்தார். இதற்கிடையில் எர்வின் 146 பந்தில் 9 பவுண்டரி், 1 சிக்சருடன் சதம் அடித்தார். இவர் ஏற்கனவே நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்திருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 2-வது சதமாகும்.



    சதம் அடித்த எர்வின் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். கேப்டன் கிரிமர் 13 ரன்னில் வெளியேற 9-வது விக்கெட்டுக்கு எர்வின் உடன் ட்ரிபானோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட்டுக்கள் விழாமல் பார்த்துக் கொண்டது. இதனால் ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்துள்ளது. எர்வின் 151 ரன்னுடனும், ட்ரிபானோ 24 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இலங்கை அணி தரப்பில் ஹெராத் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டும், குணரத்னே 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    Next Story
    ×