search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவிசாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி?: புதிய தகவல்கள்
    X

    ரவிசாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி?: புதிய தகவல்கள்

    புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட்டது எப்படி என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.

    ஏற்கனவே இந்திய அணியின் இயக்குனராக பணியாற்றிய அவர் 2019 உலக கோப்பை வரை பயிற்சியாளராக பதவி வகிப்பார்.

    ரவிசாஸ்திரியோடு பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானும், பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டனர்.

    பயிற்சியாளர் நேர்காணல் முடிந்து பயிற்சியாளர் யார் என்பதை கிரிக்கெட் வாரியத்திடம் ஆலோசனை குழு அளிக்கவில்லை.

    பயிற்சியாளர் நியமனம் குறித்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அந்த குழுவில் உள்ள கங்குலி தெரிவித்தார்.

    இதனால் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும், ஷேவாக்குக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக நியமனம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    இந்த நிலையில் ரவிசாஸ்திரி புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பயிற்சியாளர் பதவிக்கு ஷேவாக், ரவிசாஸ்திரி இடையே போட்டி நிலவியது. ஆனால் வீராட்கோலி அளித்த பரிந்துரை காரணமாகவே ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ரவிசாஸ்திரியை நியமனம் செய்ய கங்குலி ஆர்வம் காட்டவில்லை.


    ஆனால் இந்த வி‌ஷயத்தில் கங்குலியை சரிகட்டி சமாதானப்படுத்தியவர் தெண்டுல்கர். ஆலோசனை குழுவில் உள்ள அவர் அணியின் முடிவுக்கே மதிப்பளிக்க வேண்டும் என்று கங்குலியிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    தெண்டுல்கரின் அறிவுரையை ஏற்று வேறு வழியில்லாமல் கங்குலி சம்மதித்தார்.

    பந்துவீச்சு பயிற்சியாளராக பரத்அருணை நியமிக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி கேட்டுக்கொண்டார். இதை கங்குலி ஏற்கவில்லை. ஜாகீர்கானை நியமிப்பதில் உறுதியாக இருந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக கங்குலியின் தேர்வே உறுதியானது.

    கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
    Next Story
    ×