search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - பெயஸ் ஜோடி வெளியேற்றம்
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - பெயஸ் ஜோடி வெளியேற்றம்

    விம்பிள்டன் டென்னிசில் செர்பிய வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு எளிதில் முன்னேறினர். இந்தியாவின் பெயஸ் ஜோடி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது.
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஆடம் பாவ்லாசெக்கை (செக்குடியரசு) பந்தாடினார். 1 மணி 34 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜோகோவிச் 3-வது சுற்றில் லாத்வியா வீரர் எர்னெஸ்ட்ஸ் குல்பிசை சந்திக்கிறார். குல்பிஸ் தனது 2-வது ரவுண்டில் அபாயகரமான வீரர்களில் ஒருவராக வர்ணிக்கப்படும் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவை (அர்ஜென்டினா) 6-4, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் சாய்த்தார்.

    இதே போல் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் பாக்தாதிசையும் (சைப்ரஸ்), பிரான்சின் கேல் மான்பில்ஸ் 7-6 (7-1), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் கைல் எட்மன்டையும் விரட்டினர்.

    ஸ்பெயின் வீரர் டேவிட் பெரரை எதிர்த்து களம் இறங்கிய பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ் 0-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது முதுகுவலியால் விலகினார். இந்த விம்பிள்டனில் ஆண்கள் ஒற்றையரில் காயத்தால் ஓட்டம்பிடித்த 8-வது வீரர் ஸ்டீவ் டார்சிஸ் ஆவார்.

    இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- கனடாவின் அடில் ஷமாஸ்தின் ஜோடி ஆஸ்திரியாவின் ஜூலியன் நோலே- பிலிப் ஆஸ்வால்ட் இணையை எதிர்கொண்டது. 23-வது முறையாக விம்பிள்டனில் கால்பதித்த லியாண்டர் பெயசின் சவால் இந்த முறை முதல் சுற்றுடன் அடங்கிப்போனது. 4 மணி நேரம் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் பெயஸ்-ஷமாஸ்தின் ஜோடி 6-4, 6-4, 2-6, 6-7 (2-7), 8-10 என்ற செட் கணக்கில் போராடி தோற்றது.



    பெண்கள் ஒற்றையரில் ரஷிய வீராங்கனை குஸ்னெட்சோவா 6-0, 7-5 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் மகரோவாவை வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் போலந்தின் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா 5-7, 7-6 (9-7), 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மெக்ஹாலேவை வீழ்த்தினார்.

    3-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), 6-3, 5-7, 2-6 என்ற செட் கணக்கில் சுலோவக்கியாவின் ரைபரிகோவாவிடம் வீழ்ந்தார். இதே போல் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா 3-6, 6-1, 2-6 என்ற என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் பிரங்கிளிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியனான கிவிடோவா கையில் கத்திக்குத்து காயமடைந்த பிறகு பங்கேற்ற 3-வது தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×