search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியாவின் வெற்றி தொடருமா?
    X

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியாவின் வெற்றி தொடருமா?

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது.
    ஆன்டிகுவா:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 105 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நாளை (30-ந்தேதி) நடக்கிறது.

    கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் அதிரடியை வெளிப்படுத்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ள இந்திய அணி நாளையும் வெற்றி பெற போராடும்.

    பேட்டிங்கில் ரகானே, தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளனர். இதுதவிர யுவராஜ்சிங், டோனி, ஹர்த்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.



    பந்துவீச்சில் குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார் முத்திரை பதிக்க கூடியவர்கள். இதுதவிர அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோரும் திறமையை வெளிப்படுத்தக்கூடிய பவுலர்கள் ஆவார்கள்.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. 2-வது ஆட்டத்தில் விளையாடிய வீரர்களே இடம் பெறுவார்கள்.

    வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து 1-1 என்ற சமநிலையை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ளது.

    வெஸ்ட்இண்டீஸ் அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடைசி 3 ஆட்டத்துக்கான அணியில் இருந்து கிரண் போவல், ஜோனதன் கார்ட்டர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக கெய்ல் ஹோப், சுனில் அம்ரீஸ் ஆகிய புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த மாற்றம் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பலனை தருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ‘டென்3’டெலிவிசனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), தவான், ரகானே, யுவராஜ்சிங், டோனி, ஹர்த்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், முகமது ‌ஷமி, ரிஷப் பந்த்.

    வெஸ்ட்இண்டீஸ்: ஹோல்டர் (கேப்டன்), இவின் லீவிஸ், ரோஸ்டன் சேஸ், ஜேசன் முகமது, சுனில் அம்ரிஸ், கெய்ல் ஹோப், ‌ஷகி ஹோப், தேவேந்திர பிஷூ, கும்மின்ஸ், அல்ஜாரி ஜோசப்ஸ், ஆஸ்லே நர்ஸ், ரோவ்மேன் போவெல், வில்லியம்ஸ்.
    Next Story
    ×