search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த கங்குலி உள்பட 7 பேர் கொண்ட கமிட்டி: இந்திய கிரிக்கெட் வாரியம்
    X

    லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த கங்குலி உள்பட 7 பேர் கொண்ட கமிட்டி: இந்திய கிரிக்கெட் வாரியம்

    லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய கங்குலி உள்பட 7 பேர் கொண்ட கமிட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.
    புதுடெல்லி:

    லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய கங்குலி உள்பட 7 பேர் கொண்ட கமிட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் வெளிப்படையாகவும், திறம்படவும் இருக்க பல்வேறு சீர்திருத்தங்களை நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்து இருந்தது. லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை மேற்பார்வையிட 4 பேர் கொண்ட நிர்வாக கமிட்டியை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.



    லோதா கமிட்டி சிபாரிசுகளில் இடம் பெற்றுள்ள ‘ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு ஓட்டு, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகியாக இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக இரண்டு முறைக்கு மேல் ஒருவர் பதவி வகிக்கக்கூடாது. தேர்வு கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு’ உள்ளிட்ட சில அம்சங்களுக்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் லோதா கமிட்டி சிபாரிசுகளை சிறப்பாகவும், விரைவாகவும் அமல்படுத்துவதை ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை ஆராய 7 பேர் கொண்ட கமிட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. கமிட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, கேரள கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் டி.சி.மேத்யூ, மேகாலயா கிரிக்கெட் சங்க செயலாளர் நபா பட்டாச்சார்ஜி, குஜராத் கிரிக்கெட் சங்க செயலாளரும், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவின் மகனுமான ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி, பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி, ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    கமிட்டியின் தலைவராக ராஜீவ் சுக்லாவும், கன்வீனராக அமிதாப் சவுத்ரியும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கமிட்டி விரைவில் கூடி சிபாரிசுகளில் சிலவற்றை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை ஆய்வு செய்து 2 வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்யும். அறிக்கை பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். லோதா கமிட்டி விவகாரம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பாக கமிட்டி அறிக்கை தயாரித்து தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. 
    Next Story
    ×