search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியுடன் என் மகன் போட்டோ எடுத்தது ஏன்?- ரகசியத்தை வெளியிட்ட பாக். கேப்டன்
    X

    டோனியுடன் என் மகன் போட்டோ எடுத்தது ஏன்?- ரகசியத்தை வெளியிட்ட பாக். கேப்டன்

    சாதனைக் கேப்டன் என்று பெயரெடுத்த டோனியுடன் தனது மகன் ஏன் படம் எடுத்தான் என்பதற்கான ரகசியத்தை பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அஹமது வெளிப்படுத்தியுள்ளார்.
    சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. லீக் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் பலப்பரீட்சை நடத்தினார்கள். பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி எலியும் பூனையும் மோதிக்கொள்வதற்கு இணையாக கருதப்படும். இதனால் ரசிகர்கள் பரபரப்பாகவே காணப்படுவார்கள்.

    அதேபோல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்திற்குள் ஆக்ரோஷமாக செயல்படுவார்கள். சில நேரங்களில் ஸ்லெட்ஜிங் எல்லை மீறுவதும் உண்டு.

    ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையில் எந்த மோதலும் வரவில்லை. தங்களுக்குண்டான இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் அசார் மெஹ்முத் உடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

    போட்டிக்கு முன் பாகிஸ்தான் வீரர்களின் குழந்தைகளுடன் இந்திய வீரர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். தொடக்க வீரர் அசார் அலி குழந்தைகளுடன் விராட் கோலி, யுவராஜ் சிங் மற்றும் டோனி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    கேப்டன் சர்பிராஸ் அஹமது குழந்தையை டோனி எடுத்து பாசமாக கொஞ்சினார். அந்த படத்தை சர்பிராஸ் அஹமது தனது சமூக இணைய தளத்தில் வெளியிட்டிருந்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி கோப்பையுடன் பாகிஸ்தான் சென்ற அந்நாட்டு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. நாள்தோறும் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர்.



    இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது தன்னுடைய மகள் ஏன் டோனியுடன் போட்டோ எடுத்துக்கொண்டார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

    டோனியின் மடியில் தனது மகன் உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டது குறித்து சர்பிராஸ் அஹமது கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் நான் எனது குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்தேன். நாங்களும் இந்திய அணி வீரர்களும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்ததால், ஒருமுறை நான் டோனியை பார்த்தேன்.

    அப்போது அவரிடம் சென்று எனது மகன் அப்துல்லா உடன் நீங்கள் நின்று போட்டோ ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டேன். எனது மகன் வளர்ந்த பிறகு, கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் மடியில் உட்கார்ந்து எடுத்த போட்டோ அவருக்கு இனிவான நினைவாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×