search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒருநாள் போட்டி: 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    X

    2-வது ஒருநாள் போட்டி: 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 43 ஓவர்களில் 311 என்ற கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.   

    இந்தியா ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது.



    இந்நிலையில் 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. மழை பெய்ததால் ஆட்டம் காலதாமதம் ஆனது. உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

    மழையினால் தாமதம் ஆனதால் ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டது. மழை நின்றதும் களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே ரன்களை குவிக்கத் துவங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 104 பந்துகளில் 103 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய ஷிகர் தவான் 59 பந்துகளில் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.



    பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 66 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆட்டமிழந்த நிலையில், ஹார்திக் பாண்டியா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய யுவராஜ் சிங் 14 ரன்களை குவித்தார்.

    43 ஓவர்களின் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 310 ரன்களை குவித்தது. எம்.எஸ். தோனி மற்றும் கேதர் ஜாதவ் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இருவரும் 13 ரன்களை குவித்திருந்தனர். 311 என்ற கடின இலக்கை துரத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்க வீரர்களில் ஒருவரான பொவல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய எஸ்.டி. ஹோப் 81 ரன்களை குவித்தார்.

    மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மொகம்மது ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்து போக 43 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே எடுத்தது.



    இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் ஐந்து ஓவர்களில் 9 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து  இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். இதேபோல் குவல்தீப் யாதவ் ஒன்பது ஓவர்களில் 50 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 
    Next Story
    ×