search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் பாதியில் ரத்து
    X

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் பாதியில் ரத்து

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. அதே மைதானத்தில் இன்று 2-வது ஆட்டம் நடக்கிறது.
    போர்ட்ஆப் ஸ்பெயின்:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. அதே மைதானத்தில் இன்று 2-வது ஆட்டம் நடக்கிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது.

    முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஷிகர் தவானும் (87 ரன்), ரஹானேவும் (62 ரன்) அசத்தல் தொடக்கம் தந்தனர். யுவராஜ்சிங் (4 ரன், 10 பந்து) சோபிக்கவில்லை. இந்திய அணி 39.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது முறையாக மழை குறுக்கிட்டது. அப்போது கேப்டன் விராட் கோலி (32 ரன்), விக்கெட் கீப்பர் டோனி (9 ரன்) களத்தில் இருந்தனர்.

    மழையால் 3 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பிறகு மழை ஓய்ந்து, மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டது. அத்துடன் இந்தியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டு, ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்களில் 194 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்குவதற்கு முன்பு மீண்டும் பலத்த மழை கொட்டியதால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதனால் இந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. தொடரின் முதல் ஆட்டத்திலேயே முடிவு கிடைக்காததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானார்கள்.



    அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்திய அணியில் மூத்த வீரர் யுவராஜ்சிங்கின் பார்ம் தான் கவலைக்குரிய அம்சமாக உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க லீக்கில் அரைசதம் அடித்த பிறகு யுவராஜ்சிங் 7 ரன் (இலங்கைக்கு எதிராக), 23 ரன் நாட்-அவுட் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), 22 ரன் (பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி), இப்போது 4 ரன் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) என்று சொற்ப ரன்களிலேயே வீழ்ந்துள்ளார்.

    2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்கான திட்டத்தில் 35 வயதான யுவராஜ்சிங்குக்கு அணியில் இடம் உண்டா? இல்லை என்றால் அவருக்கு பதிலாக வேறு வீரருக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார். அதனால் யுவராஜ்சிங், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். அப்போது தான் இடத்தை தக்க வைக்க முடியும்.

    முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் இரு அணிகளிலும் பெரும்பாலும் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், ரஹானே, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ்.

    வெஸ்ட் இண்டீஸ்: எவின் லீவிஸ், கீரன் பவெல், ஷாய் ஹோப், ஜாசன் முகமது, ரோஸ்டன் சேஸ், ஜோனதன் கார்டர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ், தேவேந்திர பிஷூ, அல்ஜாரி ஜோசப், மிக்யூல் கம்மின்ஸ்.

    இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென் 3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    இந்த ஆட்டமும் மழையால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    Next Story
    ×