search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டி20: இங்கிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி
    X

    2-வது டி20: இங்கிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி

    2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் 2-வது போட்டி நேற்று டவுண்டன் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்மட்ஸ், ஹென்றிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹென்றிக்ஸ் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் மொசேலே 15 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஸ்மட்ஸ் 45 ரன்னில் வெறியேறினார்.

    அதன்பின் வந்த கேப்டன் டி வில்லியர்ஸ் 20 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன்னும், பெஹார்டியன் 21 பந்தில் தலா இரண்ட சிக்ஸ், பவுண்டரிகளுடன் 32 ரன்னும் எடுக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பில்லிங்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். பில்லிங்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து பேர்ஸ்டோவ் களம் இறங்கினார்.

    மற்றொரு தொடக்க வீரர் ராய் பேர்ஸ்டோவ் உடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்றது. இங்கிலாந்து அணி 13.4 ஓவரில் 125 ரன்கள் எடுத்திருக்கும்போது பேர்ஸ்டோவ் 37 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 38 பந்தில் 50 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    அடுத்து ஜேசன் ராய் உடன் லிவிங்ஸ்டோன் ஜோடி சேர்ந்தார். 16-வது ஓவரின் முதல் பந்தில் பீல்டர் ஸ்டம்பை நோக்கி பந்து வீசும்போது, ராய் அதை தடுக்கும் வகையில் ஓடியதால் அவுட் கொடுக்கப்பட்டது. இதற்கு obstructing the field என்று பெயர். ராய் 45 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து சோகத்துடன் வெளியேறினார்.

    ராய் அவுட்டானபோது இங்கிலாந்து 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து வெற்றிக்கு 29 பந்தில் 42 ரன்கள் தேவைப்பட்டது.

    தென்ஆப்பிரிக்காவின் நேர்த்தியான பந்து வீச்சால் பட்லர் (10), மோர்கன் (6) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.



    லிவிங்ஸ்டோன் 14 ரன்னுடனும், டாவ்சன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெலுக்வாயோ அந்த ஓவரை வீசினார். முதல் மூன்று பந்திலும் இங்கிலாந்து அணியால் தலா ஒரு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 4-வது பந்தில் லிவிங்ஸ்டோன் ரன்அவுட் மூலம் ஆட்டம் இழந்தார். இருந்தாலும் அந்த பந்தில் ஒரு ரன் கிடைத்தது.

    இதனால் கடைசி இரண்டு பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை டவ்சன் பவுண்டரிக்கு விளாசினார். கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவை என்ன நிலையில், அவரால் ரன்ஏதும் அடிக்க முடியவில்லை.

    இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 4 ஓவரில் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி கிறிஸ் மோரிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

    3-வது மற்றும் கடைசி பேட்டி நாளை கார்டிஃபில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    Next Story
    ×