search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: புதிதாக 32 வீரர்கள் அணிகளுக்கு தேர்வு
    X

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: புதிதாக 32 வீரர்கள் அணிகளுக்கு தேர்வு

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியையொட்டி 32 புதிய வீரர்கள் ஒதுக்கீடு அடிப்படையில் அணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
    சென்னை:

    8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் அடுத்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 20-ந்தேதி வரை சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை சந்திக்கிறது. கடந்த சீசனில் 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் லீக்கில் திருவள்ளூர் வீரன்சுடன் ஜூலை 24-ந்தேதி நெல்லையில் மோதுகிறது.

    இரண்டாவது டி.என்.பி.எல். போட்டியையொட்டி ஒவ்வொரு அணி நிர்வாகமும் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் போக, சிலரை கழற்றி விட்டன. அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. ஒவ்வொரு அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்த வீரர்கள் அணிகளின் தேவைக்கு ஏற்ப ஒதுக்கப்பட்டனர். இந்த வகையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் 30 வயதான ஆர்.சுதீஷ், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பேட்ஸ்மேன் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒதுக்கப்பட்டனர்.

    அதிகபட்சமாக மதுரை சூப்பர் ஜெயன்ட் அணி 9 வீரர்களை பெற்றது. நடப்பு சாம்பியன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியில் 19 வீரர்கள் அப்படியே நீடிக்கிறார்கள். அதனால் அந்த அணிக்கு எந்த வீரர்களும் தேவைப்படவில்லை.

    மொத்தம் 32 வீரர்கள் அணிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் விவரம்:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: சுதீஷ், ராதாகிருஷ்ணன்.

    கோவை கிங்ஸ்: பிரதோஷ் ரஞ்சன் பால், மனிஷ் ரவி, சித்தார்த், தீபன் லிங்கேஷ்.

    மதுரை சூப்பர் ஜெயன்ட்: ஷாருக்கான், செந்தில் நாதன், பொய்யாமொழி, கார்த்திகேயன், சிவராமகிருஷ்ணன், கணேஷ், பிரசாந்த் பிரபு, மணி பாரதி, அஜித்.

    திருச்சி வாரியர்ஸ்: விக்னேஷ், ஆதித்ய கிரிதர், ஜெபாஸ் மோசஸ், மொகித் ஹரிஹரன், பிரஷித் ஆகாஷ், மனோகரன்.

    திருவள்ளூர் வீரன்ஸ்: ராஜன், சித்தார்த், அஸ்வின்குமார்.

    திண்டுக்கல் டிராகன்ஸ்: கிஷன் குமார்,தினேஷ், ஆரிப்.

    காரைக்குடி காளை: ஷிகர் ஹக்கு, திரிலோக் நாக், ஆஷிஷ் ஸ்ரீகிருஷ்ணன், வருண் சக்ரவர்த்தி, நிவேதன் ராதாகிருஷ்ணன்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கூறுகையில், ‘கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட டி.என்.பி.எல். தொடர் மாபெரும் வெற்றியை பெற்றது. எதிர்பார்த்ததை காட்டிலும் இந்த போட்டி லட்சகணக்கான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது. தமிழகத்தில் வளர்ந்து வரும் ஏராளமான திறமையாளர்களை வெளிக்கொணரும் இந்த தொடர் நடப்பு ஆண்டும் சிறப்பான வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமில்லை’ என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறுகையில், ‘சிறந்த வீரர்களை கொண்ட எங்கள் அணி கடந்த ஆண்டு நன்றாக செயல்பட்டது. இந்த ஆண்டு ராதாகிருஷ்ணன், சுதீஷ் ஆகியோரை தேர்வு செய்து அணியை வலுப்படுத்தி உள்ளோம். சுதீஷ், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் கிடையாது. இடக்கை வேகப்பந்து வீச்சாளரை எடுத்திருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்’ என்றார்.
    Next Story
    ×