search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டி20 கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து
    X

    முதல் டி20 கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பேர்ஸ்டோவ், ஹேல்ஸ் அதிரடியால் இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.

    சவுதாம்ப்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஸ்மட்ஸ், ஹென்றிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஸ்மட்ஸ் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

    அடுத்து கேப்டன் டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் ஹென்றிக்ஸ் 3 ரன்னிலும், டேவிட் மில்லர் 9 ரன்னிலும் வெளியேற, 4-வது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் பெஹார்டியன் ஜோடி சேர்ந்தார்.


    58 பந்தில் 65 ரன்கள் சேர்த்த டி வில்லியர்ஸ்

    இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது, டி வில்லியர்ஸ் 58 பந்தில் நான்கு பவுண்டரி, 2 சிக்சருடன் 65 ரன்களும், பெஹார்டியன் 52 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 64 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 95 பந்தில் 110 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவரில் 45 ரன்கள் குவித்தது. ராய் 14 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    அடுத்து ஹேல்ஸ் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி காட்ட இங்கிலாந்து அணி 14.3 ஓவரிலேயே 143 ரன்கள்எ எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


    35 பந்தில் 60 ரன்கள் சேர்த்த பேர்ஸ்டோவ்

    ஹேல்ஸ் 38 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 47 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 35 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 62 பந்தில் 95 ரன்கள் குவித்தது.

    35 பந்தில் 60 ரன்கள் குவித்த பேர்ஸ்டோவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி நாளை நடக்கிறது.
    Next Story
    ×