search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் நாளை பலப்பரீட்சை
    X

    முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் நாளை பலப்பரீட்சை

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை நடக்கிறது.
    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடி இந்திய அணி லண்டனில் இருந்து அப்படியே வெஸ்ட் இண்டீசுக்கு புறப்பட்டு சென்றது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் மிகவும் மோசமாக தோற்றது. இதனால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை முழுமையாக வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.



    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் இடம் பெற்றுள்ளார். இதனால் தவானுடன் தொடக்க வீரராக யார் விளையாடுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ரகானே அல்லது ரிஷப் பந்த் தொடக்க வீரராக களம் இறங்கலாம்.

    மேலும் வேகப்பந்து வீரர் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு குல்திப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். பும்ரா இடத்தில் வேகப்பந்து வீரரான முகமது ‌ஷமி அல்லது உமேஷ் யாதவ் இடம் பெறலாம்.

    இந்திய அணி கடைசி 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் விளையாடிய 3 நாடுகள் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது. இதனால் இந்த தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகியதால் இந்திய அணி இந்த தொடரில் நெருக்கடியுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



    வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுடன் ஒரு நாள் தொடரில் விளையாடியது. 3 போட்டி கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்த தொடரில் விளையாடிய வீரர்களே முதல் 2 போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றம் எதுவும் இல்லை.

    இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி பெர்த்தில் நடந்த உலக கோப்பையில் மோதின. இதில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    வீரர்கள் விவரம்:

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), தவான், ரகானே, யுவராஜ் சிங், டோனி, ஹார்த்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர் குமார், தினேஷ் கார்த்திக், ரி‌ஷப் பந்த், உமேஷ் யாதவ், முகமது ‌ஷபி, குலதீப் யாதவ்.

    வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), இவான் வீவாஸ், ரோஸ்டன் சேஸ், ஹோப், ஜேசன் முகமது, கீரன்போவெல், ஜோனதன் கார்ட்டர், ரோவ்மேன் போவெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஆஸ்லே நர்ஸ், அல்ஜாரி ஜோசப்ஸ், தேவேந்திர பிஷு, கும்மின்ஸ்.
    Next Story
    ×