search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக கிரிக்கெட் அணியில் இருந்து விலகினார், ராபின் உத்தப்பா
    X

    கர்நாடக கிரிக்கெட் அணியில் இருந்து விலகினார், ராபின் உத்தப்பா

    கர்நாடக கிரிக்கெட் அணியில் இருந்து விலகிய ராபின் உத்தப்பா அடுத்த ரஞ்சி சீசனில் இருந்து கேரளா அணிக்காக விளையாட உள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகா கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பருமான ராபின் உத்தப்பா 2002-ம் ஆண்டு முதல் அந்த அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடி வருகிறார். 2014, 2015-ம் ஆண்டுகளில் கர்நாடகா அணி ரஞ்சி கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய ராபின் உத்தப்பா, ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

    2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார். 15 ஆண்டுகளாக கர்நாடகா அணிக்காக விளையாடி வந்த ராபின் உத்தப்பா, அடுத்த ரஞ்சி சீசனில் இருந்து கேரளா அணிக்கு மாறுகிறார். கேரள அணியின் பயிற்சியாளராக டேவ் வாட்மோர் (ஆஸ்திரேலியா) நியமனம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து ராபின் உத்தப்பா இந்த முடிவை எடுத்து இருப்பதாக தவகல்கள் தெரிவிக்கின்றன.

    கர்நாடக அணியில் இருந்து விலக ராபின் உத்தப்பா தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி) பெற்று விட்டார். அவரை தக்க வைத்துக் கொள்ள கர்நாடகா கிரிக்கெட் சங்கம் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இது குறித்து கர்நாடக கிரிக்கெட் சங்க இடைக்கால செயலாளர் சுதாகர்ராவ் கருத்து தெரிவிக்கையில், ‘நான் ராபின் உத்தப்பாவுடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் கேரள அணிக்கு செல்வதற்கான காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் அவரை தக்க வைக்க போதிய முயற்சிகள் செய்தோம். ஆனால் அது முடியவில்லை. அவர் கேட்டபடி என்.ஓ.சி. கொடுத்து விட்டோம். கர்நாடக கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது. அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என்றார்.

    31 வயதான ராபின் உத்தப்பா 46 ஒருநாள் போட்டியில் ஆடி 6 அரை சதத்துடன் 934 ரன்னும், 13 இருபது ஓவர் போட்டியில் ஆடி ஒரு அரை சதத்துடன் 249 ரன்னும், 130 முதல் தர போட்டியில் விளையாடி 21 சதம், 48 அரைசதம் உள்பட 8,793 ரன்கள் எடுத்துள்ளார். 
    Next Story
    ×