search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இடையேயான போட்டி மழையால் ரத்து
    X

    சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இடையேயான போட்டி மழையால் ரத்து

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
    லண்டன்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டம் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    துவக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். தமீம் இக்பால் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளித்து நேர்த்தியாகவும், அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ஆடினார். ஆனால், மறுமுனையில் அவருடன் இணைந்த வீரர்கள் களத்தில் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சவுமியா சர்க்கார் (3), இம்ரல் கயிஸ் (6), முஷ்பிகுர் ரகிம் (9) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.



    இந்த நெருக்கடிக்கு மத்தியில் அரை சதம் கடந்த தமீம் இக்பால் சதத்தை நோக்கி முன்னேறினார். அவருடன் 5-வது வீரராக களமிறங்கிய சாகிப் அல் அசன் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தமீம் இக்பால் 95 ரன்களில் ஆட்டமிழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். கடைசியில் ஸ்டார்க் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற, வங்காளதேச அணி 44.3 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆடம் சம்பா 2 விக்கெட்டுகளும், ஹசில்வுட், கம்டமின்ஸ், ஹெட், ஹென்றிக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. வார்னர் மற்றும் பின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர். ஆட்டத்தின் 8-வது ஓவரில் ருபேல் ஹுசைன் பந்துவீச்சில் 19 ரன்களுடன் பின்ச் வெளியேறினார்.

    இதனையடுத்து, கேப்டன் ஸ்மித் களமிறங்கினார். வார்னர் மற்றும் ஸ்மித் இணைந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 83-ஆக இருக்கும் போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை விடாததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டன. எளிய இலக்கு இருந்தும் மழையால் ஆட்டம் தடைப்பட்டதால் ஆஸ்திரேலியா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    Next Story
    ×